பேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது ! உண்மை கசிந்தது

பேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின் அரசியல் யாப்பு, பாரளுமன்ற அமைப்புமுறை, இலங்கை பாரளுமன்ற கட்டமைப்பின் பாதகங்கள் பற்றி ஆராய்வதற்கு ஜேர்மன் அரசை அணுகியிருந்தபொழுதும் நான் ஜேர்மன் அரசு சார்பு தொடர்பாளராக கடமையாற்றியுள்ளேன். அந்த பயணத்தில் விடுதலைப் புலிகள் சுவிஸ் வந்திருந்த பொழுதில் இந்தப்பேட்டி எடுக்கப்பட்டிருந்தது என நினைக்கிறேன்.

அரசுத் தரப்பு & புலிகளின் சமாதான பேச்சுவார்த்தையில் முதல் பேச்சுவார்த்தை தொடங்கி மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை அடுத்தடுத்து நடந்த அமர்வுகளில் சுயாட்சிக்கான அதிகாரப் பகிர்வுக்கு அரசுத் தரப்பு ஒத்துக்கொண்டது.
நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை தாய்லாந்து நாட்டின் நாக்கோன் பத்தோம் என்னும் நகரில் 2003-ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 9-ஆம் தேதிவரை நடைபெற்றது. பேச்சுவார்த்தைகளின் இறுதியில் உலக நாடுகளிடமிருந்து வடக்கு-கிழக்குப் பகுதிகளின் புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுக்காகப் பெறப்படும் நிதியினை யார் பெறுவது, எவர் பொறுப்பில் வைத்துக் கையாளுவது என்பதும், பாதுகாப்புவளையப் பகுதிகளில் தமிழர்கள் குடியேற்றம், குறித்தும் அவ்வாறு குடியேறும் மக்களில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் இருந்தால், அவர்கள் ஆயுதங்களைக் களையவேண்டும் என, விரிவாக விவாதிக்கப்பட்டது. இறுதித் தீர்மானமாக, உலக நிதியளிப்போரிடமிருந்து பெறப்படும் நிதியைக் காப்பது, உலக வங்கியின் பொறுப்பில் விடுவது என்றும் முடிவானது.

ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை, 7-8, பிப்ரவரி 2003. பாலசிங்கத்தின் உடல்நிலை மோசமானதன் காரணமாக, அவரால் அதிகதூரம் பயணம் செய்யமுடியாத நிலையில், ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள நோர்வே தூதரக வளாகத்தில் நடைபெற்றது.

நோர்வே மற்றும் பேச்சுவார்த்தைக்குழுவின் வேண்டுகோள்களுக்கு அமைய ஜேர்மனியை தேர்ந்தெடுத்ததில் பல பின்புல அரசியல், பொருளாதார, ராஜதந்திரக் காரணங்கள் உண்டு. எல்லாவற்றையும் நான் இங்கு கூறமுடியாது. ஜேர்மனியர், ஜரோப்பாவின் ஒரு முக்கிய வல்லரசுநாடு, தொழில் நுட்பத்தில், அபிவிருத்தியில் முன்னணியில் இருப்பவர்கள், பலமான சட்டங்களை, வெளியுறவுக் கொள்கைகளை கொண்டவர்கள், மற்றய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு பணத்தை வாரி இறைப்பவர்கள், அதைவிட போருக்கு பின்னரான நாட்டின் மீள் கட்டுமானத்தில் மிகுந்த அனுபவம் உள்ளவர்கள் என்ற காரணங்களால் ஜேர்மனையும் பின்தளத்தில் உள்வாங்க போடப்பட்ட திட்டத்தின் ஆரம்பம்தான் ஜேர்மனின் தெரிவு. இதற்கு ஜேர்மன் அரசு தனது 5 பேர் அடங்கிய குழுவை தெரிவுசெய்திருந்தது. அதில் நானும் ஒருவன், மிச்சப்படி நேரடியான பங்காற்றல் எல்லாம் நோர்வேயின் தலைமையில், வழிகாட்டலில் மாத்திரமே நடைபெற்றது.

இந்த ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தைத் தொடங்க இருந்த சிறிது நேரத்துக்கு முன்பாக இலங்கை கடற்படையானது, புலிகளின் படகொன்றை வழிமறித்தது என்றும், அதிலிருந்த 3 கடற்புலிகள் சயனைட் அருந்தத் தயாராக இருப்பதாகவும் கடற்பிரிவுத் தலைவர் சூசை, பேர்லினுக்கு பாலசிங்கத்திடம் தெரிவித்தார். அங்கிருந்த அமைச்சர் மிலிண்டா மோரகோடாவிடம், விளைவுகள் மோசமாவதைத் தடுக்கவேண்டும் என்று பாலசிங்கம் கேட்டுக்கொண்டார். இந்தச் செய்திப் பரிமாற்றத்துக்கிடையே 3 கடற்புலிகளிடமிருந்தும், தகவல் தொடர்பு இல்லை என்று மீண்டும் சூசையைத் தொடர்புகொண்டு தெரிவித்தார்.

போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைவர் ஜெனரல் ஃபுருகோவ்ட், அந்த மூன்று கடற்புலிகளும் சயனைட் அருந்திய நிலையில் படகு தகர்க்கப்பட்டது என்று பேர்லினுக்கு தகவல் தெரிவித்தார். அத்தோடு அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை; வடக்கு-கிழக்கு புனரமைப்புப் பணிகளுக்கும் போதிய நிதியாதாரம் வழங்கப்படவில்லை; மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லமுடியவில்லை; போரில் இடப்பெயர்வு ஆனவர்களை மீண்டும் அவர்களது இடத்தில் குடியமர்த்த முடியவில்லை; பாதுகாப்புக் காரணங்கள் என்று ராணுவம் மறுக்கிறது என்றும் புலிகளால் புகார் கூறப்பட்டு பேர்லின் பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்காமல் குழப்பத்தில் முடிந்தது அனைவரும் அறிந்ததே. ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஜப்பான் நாட்டின் ஹக்கோனே என்னும் இடத்தில் நடைபெற்றது (18-21, மார்ச் 2003).

இந்த முதலாவது பேச்சுவார்த்தை தொடங்கி ஜப்பான் வரை ஐேர்மனி, ஐரோப்பிய யூனியன் பேச்சுவார்த்தை கண்காணிப்புக்குழுவில் நானும் அங்கத்துவம் பெற்றிருந்தேன்.

ஆனால் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.

நன்றி
புலோலியூரான் சதாவதானி

-eelamnews.co.uk

TAGS: