தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மீண்டும் தன் நாற்காலியில் அமர்ந்திருந்ததாக செய்திகள் வந்திருந்தன.கலைஞர் கருணாநிதியின் மரணத்தை கொண்டாடும் நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லை. மரணங்களை கொண்டாடும் நிலையிலும் ஈழத் தமிழர்கள் இல்லை. ஆனால் ஈழப் படுகொலைக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் தொடர்பில்லை என்றும் அவரை புனிதப்படுத்தும் முயற்சிகளுக்கு- சில கேள்விகளை முன்வைக்க அவர் உடல் நலமடைந்திருக்கும் இந்த தருணம் மிகவும் பொருத்தமுடையது என கருதுகிறோம்.
ராஜீவ் காந்திக்கும் தமீழத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்றால் ஏன் ஈழத்திற்கும் கருணாநிதிக்கும் தொடர்பிருக்க முடியாது? ஆம் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிட்டால் தமிழீழம் மலர்ந்திருக்கும் என்று காங்கிரசும் திமுகவும் சொல்கிறது. இந்த நிலையில் கருணாநிதிக்கும் ஈழத்திற்கும் தொடர்பில்லை என்றோ, ஈழ இறுதி இனப்கொலையைில் கருணாநிதி தலையிட்டு தடுக்க முடியாது என்றும் சொல்வது பொருத்தமற்றதாகும்.
கருணாநிதியினால் போரை தடுத்து நிறுத்த முடியாது எனில் எதற்காக அவர் மெரீனா கடற்கரையில் இருந்து போரை நிறுத்தும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவித்தார்? அத்துடன் போர் நிறுத்தப்பட்டு விட்டது என ஊடகங்களுக்கு கூறி எதற்காக உண்ணவிரதப் போராட்டத்தை நிறுத்தினார்? ஈழப் போரின்போது மழை நின்றாலும் தூவனம் விடவில்லை என்று கருணாநிதி கூறியதன் அர்த்தம் என்ன? எனவே தன்னால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று தெரிந்தும் அந்த பொறுப்பிலிருந்து கருணாநிதி தவறினார்.
அத்துடன் கோ தமிழக மக்களின் எதிர்ப்புணர்வை அடக்கியும் கண்டுகொள்ளாமலும் வேறு வகையிலும் கையாண்டார் கருணாநிதி. முத்துக்குமார் ஈழத்திற்காக தீக்குளித்தபோது அவர் காதல் தோல்விக்காக இறந்ததாக கருணாநிதி கூறியது மாபெரும் துரோகமல்லவா? ஈழத்திற்காக மாணவர்கள் போராடியபோது கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, விடுதிகளை மூடி அவர்களை வீட்டுக்கு அனுப்பி போராட்டத்தை முடக்கியது சரியா?
ஈழத்திற்காக நடந்த போராட்டங்களை முறியடித்தார் கருணாநிதி. போராடியவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். போர்க்களத்தில் மக்களும் புலிகளும் மாண்டபோது காங்கிரஸ் கட்சியுடன் மத்திய அரசில் பதவி உரிமை பேசிக்கொண்டிருந்தது கருணாநிதியல்லவா? அன்றைய நாளிதழ்களின் செய்தியே வரலாற்று ஆதாரமல்லவா? பின்னர் காங்கிரஸ் கட்சி – மகிந்த போர் வெற்றியின் திமுக பிரதிநிதியாக கருணாநிதியின் மகள் கனிமொழி இலங்கை வந்தார்.ஈழம் வந்த டீ.ஆர் பாலு ஈழ மக்களை எள்ளி நகையாடிப் பேசினார். ஈவிகே இளங்கோவன் அவமதித்தார்.
இப்படியெல்லாம் இருக்க திமுகவுக்கும் ஈழ இனப்படுகொலைக்கும் தொடர்பில்லை என்று சொல்ல வெட்கம் இல்லையா? மகிந்த ராஜபக்சவுக்கு ஈழ மக்களை படுகொலை செய்யும் தைரியத்தை ஏற்படுத்தியவர் கருணாநிதி என்ற சோம்போறி சுயநல முதலமைச்சரே. எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ அந்த இடத்தில் இருந்திருந்தால் ஈழ இனப்படுகொலை நடத்திராது. தமிழகத்தின் எழுச்சியை கண்டு ராஜபக்ச மாத்திரமல்ல, உலகமே அஞ்சும் நிலை ஏற்பட்டிருக்கும்.
ஈழப்போரில் இந்தியா வகித்த பங்கு தொடர்பில் சிவசங்கர் மேனன் எழுதியுள்ள புத்தகத்தில் ஈழ இனப்படுகொலையில் கருணாநிதிக்குள்ள பங்கை விபரித்துள்ளார். ஈழப்போர் விடயத்தில் இந்தியா எத்தகைய பங்கை வகித்தது என்பது பற்றியும் அவை கருணாநிதிக்கு உடனுக்குடன் அறிவிக்கப்பட்டது என்பது பற்றியும் அவர் எழுதியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் கருணாநிதி இந்திய அரசின் கொள்கையை கொண்டிருந்ததாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எனவே ஈழப்படுகொலைக்கும் கருணாநிதிக்கும் உள்ள தொடர்பை திமுக சார்ந்தவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த இடத்தில் நீங்கள் கட்சிக்காரர்களாக இல்லாமல் தமிழக மக்களாக நடந்து கொள்ளுங்கள். இதனையே ஒட்டு மொத்த தமிழக மக்களிடமும் ஈழ மக்கள் எதிர்பார்க்கின்றனர். கருணாநிதிக்கும் ஈழப்படுகொலைக்கும் உள்ள தொடர்பை விளங்குவது என்பது ஈழ மக்களின் விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் மாத்திரமல்ல தமிழக மக்கள் தங்களை இந்திய அளவிலும் உலக அளவிலும் உயர்த்திக்கொள்ள வழி வகுக்கும்.
ஆசிரியர்,
ஈழம் நியூஸ்.
03.08.2018