ஆவா கும்பலுக்கு பின்னணியில் இவர்கள்தான்! வெளியான உண்மை!

வடக்கில் இயங்கிவரும் நுண்நிதிக் கடன்களை வழங்கிவரும் நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டிகளை அறவிடுவதற்காக ஆவா கும்பலை பயன்படுத்தியுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கின்றார்.

யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக மீண்டும் தீவிரமடைந்துள்ள வன்முறைகளுடன் தொடர்புடைய பிரதான குழுக்களில் ஒன்றான ஆவா கும்பலுடன், இராணுவம் உட்பட அரச புலனாய்வாளர்களுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுவரும் நிலையிலேயே சிறிலங்கா அரசாங்கத்தின் நிதி அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பிலுள்ள நிதி அமைச்சில் இன்றைய (02.08.2018) தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய நிதி அமைச்சர், வடக்கு கிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்கள் உட்பட 12 மாவட்டங்களைச் சேர்ந்த வறுமையில் வாடும் பெண்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து அதிக வட்டிக்கு பெற்ற நுண்நிதிக் கடன்களை இரத்துச் செய்வதற்கு எடுத்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தினார்.

“ நுண்கடன்களை வழங்கிய நிறுவனங்கள் தாங்கள் வழங்கிய கடனுக்கான வட்டியை அறவிடுவதற்காக சில இடங்களில் காடையர்களை பயன்படுத்தி வருவதாகவும் எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. உண்மையில் எமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய வடக்கில் இயங்கிவரும் ஆவா கும்பல் என்ற வாள் வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் நாம் பல தகவல்களை அறிந்திருக்கின்றோம்.

உண்மையில் இந்த ஆவா கும்பல் அதிக வட்டிக்கு கடன் பெற்ற பெண்களை மிரட்டி வட்டிகளை அறிவிடுவதற்கும், அவர்களை அச்சுறுத்தி வைப்பதற்கும், அந்த அப்பாவிப் பெண்களிடம் இருந்து கடனை மீள அறிவிடுவதற்கும் பயன்படுத்தப்பட்ட கும்பலாக இருந்துள்ளமையும் தெரியவந்திருக்கின்றது.

அதேவேளை வடக்கிலும், கிழக்கிலும், அநுராதபுரம், பொலன்னறுவை பிரதேசங்களிலும் வறுமையில் வாழும் 70 வீதம் முதல் 90 வீதமான பெண்களுக்கு இந்த நுண்நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன்களை வழங்கியிருக்கிள்றன. இந்தக் கடன்களுக்காக 40 வீதம் முதல் 200 வீதம் வரையிலான வட்டிகளும் அறிவிடப்படுகின்றன.

போருக்குப் பின்னர் தமிழர் தாயகத்தின் அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து அதிக வட்டிக்கு நுண் நிதிக் கடன்களை பெற்றுக்கொண்டவர்கள் 80 க்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொது அமைப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தற்கொலை செய்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழர் தாயகத்தின் அனதை்து மாவட்டங்களிலும் வாழும் நுண்நிதிக் கடன்களைப் பெற்றுக்கொண்ட தமிழ் பெண்கள், குறித்த நிறுவனங்களின் மிகவும் மோசமான துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி வருவதை அடுத்து கடந்த மாதம் வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் நுண் நிதி கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு எதிராக போராட்டங்களும் இடம்பெற்றிருந்தன.

இதன்போதும் முல்லைத்தீவில் பேரணியில் கலந்துகொண்ட மக்களை புகைப்படம் எடுத்த நிதி நிறுவனங்களின் பணியாளர்களை பதிவு செய்த ஊடகவியலாளர் ஒருவரும் அச்சுறுத்தப்பட்டிருந்தார். நுண் நிதிக் கடன்களை வழங்கும் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கான முறையான சட்டத் திட்டங்கள் இதுவரை இயற்றப்படாமை காரணமாகவே இந்த நிலை நீடிப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஏற்றுக்கொண்டார்.

“ உத்தரவாதம் வழங்கக்கூடிய ஒருவரை கண்டுபிடிக்க முடியாத வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வங்கிககள் ஊடாக உதவும் நோக்கில் சிறிலங்காவில் 2004 ஆம் ஆண்டளவில் இந்த நுண்கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் இந்தக் காலப்பகுதியில் குறித்த கடன்களை வழங்கும் போதும், வழங்கிய கடன்களை மீள அறவீடு செய்யும் போதும் அதேவேளை வட்டி வீதங்கள் தொடர்பிலும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உண்மையை சொன்னால் இதுவரை இல்லை. இதனால் நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் அவர்கள் விரும்பிய படி அதிக வட்டிக்கு வறுமையால் பாதிக்கப்பட்ட அப்பாவி கிராமிய பெண்களை இலக்கு வைத்து கடன்களை வழங்கியுள்ளனர். இதன் விளைவாக பாரிய பிரச்சனைகள் எழுந்துள்ளன. சில இடங்களில் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: