கருணாநிதி மரணம்; ஈழத்தமிழர்களுக்கு ஒரு அவசர கோரிக்கை!

முன்னாள் தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று மாலை உயிரிழந்த செய்தி வெளியானதும் முல்லைத்தீவு நகரில் சிலர் வெடிகொழுத்தி ஆரவாரம் செய்துள்ள சம்பவம் பெரும்பாலான ஈழத்தமிழர்களிடையே அதிர்ப்தியையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (07.08.18) மாலை 7.00 மணியளவில் முல்லைத்தீவு நகர்பகுதியில் மக்கள் வர்த்தகர்கள் சிலர் இணைந்து வெடிகொழுத்தி தங்கள் ஆரவாரத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அதேவேளை, வெடி கொழுத்தி ஆரவாரம் செய்த இளைஞர்களை அங்கிருந்த பொதுமக்கள் அமைதிப்படுத்தியதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன,

அதுமட்டுமின்றி முகநூலிலும் கருணாநிதி அவர்களின் இறப்பை கொண்டாடும் விதத்தில் பல பதிவுகளை சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் பலர் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன், ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளனர்,

குறித்த வேண்டுகோள் பின்வருமாறு.,

கடந்த கால யுத்த வரலாற்றின் இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பிற்கு கருணாநிதியும் காரணமாக இருந்தார் என்றும், அவர் நினைத்திருந்தால் ஈழத்தமிழ் மக்களின் உயிர்களை காப்பாற்றி இருக்கமுடியம் என்றும், தமிழர்களின் இன அழிப்பிற்கு காரணமாக அமைந்த ஒருவர் என்றும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயாருக்கு சிகிச்சையளிக்க மறுத்து விமானத்தில் வைத்தே திருப்பி அனுப்பப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் ஈழத்தமிழர்களுக்கு அவர்மீது கோபமிருப்பது உண்மைதான்.

இருந்தாலும் நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நேரம் இதுவல்ல, ஒருவர் மரணமடைந்த நிலையில் அவரை விமர்சிப்பது, மரணத்தை கொண்டாடுவது தமிழர்களின் அடிப்படை பண்பை, கலாச்சாரத்தை மீறும் செயல்.

இதையும் தாண்டி கலைஞரின் பெருமைகளையும், அவர் தமிழுக்காற்றிய பங்களிப்பையும் கருத்தில் கொண்டும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் அவரின் இறப்பாள் துயருறும் குடும்பத்துக்கும் ஆறுதலாக இருக்கும் வகையில் அவர்களின் துன்பத்தில் நாங்களும் பங்குகொள்வோம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

-athirvu.in

TAGS: