வெடுக்குநாறி தமிழர் மலைக்கு யாரும் செல்ல கூடாதாம்! மீறி சென்றால் கைதாம்!!

நெடுங்கேணி – ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது எனவும் மீறி செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் துரைராசா தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வெடுக்குநாறி மலையையும், அங்குள்ள ஆதி ஐயனார் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதியை நெடுங்கேணி பிரதேச மக்கள் மிக நீண்டகாலமாக பாதுகாத்து வருகின்றனர்.

குறிப்பாக 2014ம் ஆண்டு வெடுக்குநாறி மலையை உடைத்து கருங்கல் அகழ்வதற்காக சிலர் முயற்சித்தபோது மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து அதனை தடுத்திருந்தார்கள்.

இந்நிலையில் கடந்த 8ம் திகதி நெடுங்கேணி பிரதேச பொலிஸ் நிலையத்திலிருந்து எமக்கு அழைப்பு வந்தது.

அந்த அழைப்பில் 10ம் திகதி காலை 10 மணிக்கு எம்மை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாகத்தினர் வரவேண்டும் எனவும் கூறப்பட்டது.

இதற்கமைய நேற்று காலை 10 மணிக்கு நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு நாங்கள் சென்றிருந்தோம். அப்போது தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகள் 4 பேர் அங்கு வந்திருந்தனர்.

அவர்கள் 4 பேரும் சிங்கள மொழி பேசுபவர்கள். அவர்கள் பேசுவதை பொலிஸார் எமக்கு மொழி பெயர்த்து கூறினார்கள்.

இதன்போது வெடுக்குநாறி மலை தமது ஆழுகைக்குள் வந்துள்ளதாகவும், வெடுக்குநாறி மலையில் உள்ள ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதிக்குள் செல்ல கூடாதெனவும், மீறி சென்றால் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளனர்.

இதேவேளை, நாளை ஆடி அமாவாசை பூசைக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.

பொலிஸார் கலந்துரையாடியதன் பின்னர் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்கள் என்றும் நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் துரைராசா தமிழ்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பகுதிகளின் எல்லைக் கிராமங்களின் மிக முக்கிய மலையாக வெடுக்குநாறி மலை காணப்படுகின்றது. இந்நிலையில் இவ்வாறு தொல்லியல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-eelamnews.co.uk

TAGS: