‘தமிழ் முதலமைச்சர் கிடைத்தால் காணி அபகரிப்பு நிறுத்தப்படுமா?’

கிழக்கு மாகாணத்துக்கு, தமிழ் முதலமைச்சர் பதவி கிடைத்து விட்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா என்று கேள்வியெழுப்பியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.சுரேஸ், இங்கு முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புகள் நிறுத்தப்படுமா என்றும் வினவினார்.

செஞ்சோலை படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல், மட்டக்களப்பு தாமரைக்கேணியில் அமைந்துள்ள முன்னணியின் தலைமையகத்தில் இன்று (14) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போ​தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“தமிழ் மக்கள் மீதான படுகொலைகள், எங்களது தமிழர் தாயக தேசத்தில் இன்றும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான படுகொலைகளை கண்டும் காணாமல் இருப்பதுதான் இந்த பொது அமைப்புகளின் நிலையாக இருக்கின்றது என்று தெரிவித்த அவர்,

தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சினைக்கு சரியான அரசியல் தீர்வை காணவேண்டுமென அரசியல் ரீதியில் எந்தவொரு தரப்பும் செயற்பட வில்லை என்றார்.

இவ்வாறான படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடைபெற்று சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்லப்படும் பட்சத்திலேயே நீதியான விசாரணைகள் நடைபெற்று எங்களது மக்களுக்குரிய தீர்வு கிடைக்கும் என்றும் கூறிய அவர், அதனைவிடுத்து, தீர்வுக்காக, வெவ்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபடுவோமாக இருந்தால், நாங்கள் இந்தப் படுகொலைகளை மென்மேலும் சந்திக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்படும். எனவே தமிழ் மக்கள் சரியான ஒரு நிலைப்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

வடக்கு, கிழக்கு பூராகவும் தலைமைத்துவ போட்டிகளும் பதவிப் போட்டிகளும் மற்றும் பதவி ஆசைகளும் தமது குடும்பம் சார்ந்த செயற்பாடுகளும் இன்றைக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்ட அவர், தமிழ் மக்களின் தலைவர்களெனக் சொல்லிக்கொள்பவர்கள், தாங்கள் ஏதோ செய்யப் போவதாக கூறிக் கொண்டு தங்களின் நலன் சார்ந்தே செயற்படுவதுடன் இந்த அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டும் பிழைப்பை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவைகளுக்கெல்லாம் மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.

-tamilmirror.lk

TAGS: