போர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா?

அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், அரசாங்கப் படைகள் வெற்றி பெற்றதில், அந்த வெற்றியின் போது, நாட்டை ஆட்சி புரிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பங்கு என்ன? அவர், அந்த வெற்றிக்காகத் தாமாக எந்த முடிவையாவது எடுத்துள்ளாரா? தனிப்பட்ட முறையில் எந்தச் சண்டையிலாவது ஈடுபட்டுள்ளாரா?

ஆனால், ஏதோ துட்டகைமுனு, எல்லாளனை நேரில் சந்தித்து, தனிப்பட்ட முறையில் சண்டையிட்டு, வெற்றி கண்டதைப் போல், தானும், பிரபாகரனை நேரில் சந்தித்து, சண்டையிட்டு வெற்றி கண்டதாக, போர் வெற்றியின் முழுப் பெருமையையும் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த. அந்த வெற்றியை, அரசியலாக்கி தேர்தல் வெற்றிகளுக்காகவும் அதைப் பயன்படுத்துகிறார்.

ஆனால், அந்த வெற்றிக்காக அவராக எடுத்த முடிவு என்ன, அவராகத் தனிப்பட்ட முறையில் செய்த பங்களிப்பு என்ன என்று கேட்டால், அவரது நெருங்கிய நண்பரும் மௌனமாகிவிடுவார்.

இருப்பினும், அரசாங்கத்தின் சார்பில், போர் வெற்றிக்காக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவும் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவுகளையும் செய்த பங்களிப்புகளையும் பட்டியல் போடலாம்.

அதனால்தான், மஹிந்தவின் நண்பரான எழுத்தாளர் சி.ஏ. சந்திரபிரேம போரைப் பற்றி, தாம் எழுதிய நுலுக்கு (Gota’s War) ‘கோட்டாவின் போர்’ எனப் பெயரிட்டுள்ளார். அது மட்டுமல்ல, விடுதலை புலிகள், தமது தவறான முடிவுகளால், அரச படைகளின் போர் வெற்றிக்காகப் பல பங்களிப்புகளை வழங்கியுள்ளனர் என்றும் கூறலாம்.

மஹிந்த ராஜபக்‌ஷ, இவ்வாறு அரச படைகளின் தியாகங்களையும் திறமைகளையும் தனது அரசியலுக்காகவும் தேர்தல் பிரசாரத்துக்காகவும் பாவிப்பதை நிறுத்தும் வகையில், போர் வெற்றியின் உண்மையான பங்காளிகள் யார் என்பதை எடுத்துக் கூறவோ என்னவோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போரின் வரலாற்றை ஆவணப்படுத்தப் போவதாக, சில தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

அதற்காக அவர், முன்னாள் இராணுவத் தளபதிகள் சிலரை அழைத்துக் கலந்துரையாடியதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டு இருந்தது. ஆனால், அந்தக் கூட்டத்துக்குப் போரின் இறுதி வெற்றியின் போது, இராணுவத் தளபதியாக இருந்த அமைச்சர் சரத் பொன்சேகாவும் அக்காலகட்டத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்‌ஷவும் சமூகமளிக்கவில்லை எனவும் செய்திகள் கூறின.

போரின் வரலாற்றை, சரியாக நடுநிலையோடு ஆவணப்படுத்துவதாக இருந்தால், அது மிகவும் சிறந்த பணி என்றே கூற வேண்டும். ஆனால், இந்தக் கூட்டத்தைப் பற்றிய தகவல்கள், இக் காரியம் சிறப்பாக நடைபெறுமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

இந்தக் கூட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கோட்டாபயவுக்கு அழைப்பு விடுத்தாரோ என்னவோ தெரியாது. அவ்வாறு அழைப்பு விடுக்காவிட்டால் அது பெரும் தவறாகும். ஏனெனில், கோட்டாபய இடைநடுவில் போரை விட்டு, அமெரிக்காவுக்குச் சென்றாலும், அவர் போரின் இறுதிக் காலத்தில், பெரும் பங்காற்றியவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அதேபோல், பொன்சேகா சமூகமளிக்காமல் இருந்தமையும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும். அந்த இருவரும் சமூகமளிக்கவில்லை என்பதை மட்டுமே ஊடகங்கள் தெரிவித்து இருந்தன. சில வேளை, வேறு சில முன்னாள் தளபதிகள் சமூகமளிக்காதிருந்து, அது ஊடகங்களின் கண்ணில் படாதிருக்கவும் கூடும்.

எவ்வாறாயினும், அரசாங்கம் முன் வந்து போரின் வரலாற்றை எழுதுவதாக இருந்தால், அது வெற்றி பெற்றவரின் கதையாகவே இருக்கும். பொதுவாக, உலகில் எங்கும் அவ்வாறு தான் வரலாறு எழுதப்பட்டு இருக்கின்றன. எனவே தான், ‘வெற்றி பெற்றவனே வரலாற்றை எழுதுவான்’ (History is written by the victor) என்பார்கள்.

அவ்வாறான வரலாற்றில், தோல்வி கண்டவரின் நியாயங்கள், தியாகங்கள் மற்றும் திறமைகள் ஆகியன இடம்பெறாது; அல்லது குறைவாகவே இடம்பெறும்; அல்லது திரிபுபடுத்தப்பட்டுத் தான் இடம்பெறும்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அப்போதைய அரசியல் செயலாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ரமேஷ் நடராஜா, ‘தினமுரசு’ பத்திரிகையின் ஆரம்ப காலத்தில் ‘அற்புதன்’ என்ற பெயரில், தமிழீழத்துக்கான ஆயுதப்போராட்டத்தின் வரலாற்றை எழுதி வந்தார். அப்போது, ஒரு வாசகர் ‘நீங்கள் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் விளம்பரம் தேடிக் கொடுக்கிறீர்கள்’ எனக் கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தையும் அந்தக் கதையோடு பிரசுரித்த நடராஜா, ‘நான் எழுதுவது கட்சிப் பிரசாரத்துக்காக அல்ல; இது வரலாறு. இன்று புலிகள் ஏனைய தமிழ் இயக்கங்களை விஞ்சிவிட்டார்களென்றால், அதற்குக் காரணங்கள் இருக்க வேண்டும். அந்தக் காரணங்களை மறைத்து, வரலாற்றை எழுத முடியாது’ என்று தமது பதிலையும் பிரசுரித்து இருந்தார். ஆனால் பொதுவாக, அந்தக் கண்ணோட்டததில் வரலாறுகள் எழுதப்படுவதில்லை.

இன்று பலர் போரைப் பற்றி எழுதுகிறார்கள். தமிழர்களும் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் அரச படைகளின் நியாயங்கள், தியாகங்கள், திறமைகள் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளன; அல்லது குறிப்பிடப்படவே இல்லை.

அதேபோல் புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் இயக்கங்களின் பங்களிப்பும் அவற்றில் இல்லை என்றே கூற வேண்டும். அதேபோல், முன்னாள் இராணுவ அதிகாரியான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட போன்றவர்கள் எழுதியவற்றில் புலிகளின் நியாயங்கள், தியாகங்கள், திறமைகள் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளன; அல்லது குறிப்பிடப்படவே இல்லை.

போதாக்குறைக்கு, அரச படைகளுக்குள் நிலவும் பொறாமை, பகைமை போன்றவற்றாலும் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. போர் முடிவடைந்தவுடன் கோட்டாபய ராஜபக்‌ஷ, “இலங்கை கண்ட மிகச் சிறந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே” என்றார்.

சிறிது காலத்தில் அவர்களுக்கிடையே பகைமை உருவாகிய போது, “எந்தவோர் இராணுவத் தளபதியும் செய்யக்கூடியதையே, பொன்சேகாவும் செய்துள்ளார்” எனக் கோட்டாபய கூறியிருந்தார்.

அதுமட்டுமல்ல, அந்தப் பகைமையின் காரணமாக, மஹிந்த ராஜபக்‌ஷ, பொன்சேகாவை அவருக்கு எதிரானவர்களைக் கொண்ட இராணுவ நீதிமன்றமொன்றின் மூலம், குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கச் செய்து, அவரது பதக்கங்களையும் ஓய்வூதியத்தையும் பறித்தார். அத்தோடு அவரை இராணுவத் தளபதிகளின் பெயர் பட்டியலிலிருந்தும் நீக்கினார். அவரது பட்டியலின் படி, இராணுவத் தளபதி ஒருவர் இல்லாமலே புலிகளுக்கு எதிரான போர் வெற்றி பெற்றிருக்கிறது.

சரத் பொன்சேகா, அவ்வாறு வரலாற்றிலிருந்து நீக்கப்படக் கூடியவர் அல்ல. முன்னைய இராணுவத் தளபதிகள் காணாத, இராணுவத்தின் குறைபாடுகளைக் கண்டு, அவற்றைச் சரி செய்து, அரசாங்கப் படைகளின் போர் வெற்றியைச் சாத்தியமாக்கியவர் அவரே.

முன்னர் படையினர், புலிகளிடமிருந்து ஓரிடத்தை கைப்பற்றிக் கொண்டால் புலிகள் மற்றொரு இடத்தை கைப்பற்றிக் கொள்வர். படையினர் அந்த இடத்தைக் கைப்பற்ற, முன்னைய இடத்திலிருந்து படையினரை அகற்றிக் கொள்ளும் போது, புலிகள் அந்த இடத்தை மீண்டும் கைப்பற்றிக் கொள்வர். இதற்குப் பொருளாதார சுமை காரணமாக இருந்தாலும், படைபலத்தை அதிகரித்தேயாக வேண்டும் என, பொன்சேகா பிடிவாதமாக இருந்தார்.

பெரிய படையணிகளாகச் செல்லாது, சிறிய சிறிய குழுக்களாகப் படைகளை முன்னகர்த்தும் தந்திரோபாயமும் பொன்சேகாவினுடையதே. போர்க் களத்தைப் பற்றிய அவரது அறிவும் அனுபவமும், இந்த விடயத்தில் பெரிதும் உதவியது.

எனவேதான், “பொன்சேகாவின் அனுபவமும் போர் உத்திகளும் இல்லாதிருந்தால், போர் வெற்றி பெற்றிருக்காது” என, கோட்டாபயவே போர் முடிவடைந்தவுடன் கூறியிருந்தார்.

கடலில் நீண்ட தூரம் சென்று, புலிகளின் ஆயுதக் கப்பல்களைக் கடற்படையினர் அழித்தமை, போர் வெற்றிக்குப் பிரதான காரணமாகியது. 2007 ஆண்டு ஆரம்பத்திலிருந்து, 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை, புலிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ஒரு பனடோல் வில்லையையாவது அனுப்ப முடியவில்லை என, கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் பின்னர் கூறியிருந்தார்.

வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்து, புலிகளுக்கு அனுப்பி வந்த கே.பியுடன், மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ், ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்காக நடாத்திய நேர் காணலின் போதே, அவர்அவ்வாறு கூறியிருந்தார்.

இவ்வாறு, புலிகளின் ஆயுதக் கிடங்குகளை வற்றச் செய்த கடற்படையின் அச்செயற்பாடுகளுக்கு, இராணுவத்தினர் வழங்கிய புலனாய்வுத் தகவல்களே காரணம் என, சரத் பொன்சேகா உரிமை கோருகிறார். ஆனால், அப்போதைய கடற்படைத் தளபதி கரன்னாகொட, தாமே அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் அந்தத் தகவல்களைப் பெற்றுக் கொண்டாகக் கூறுகிறார்.

அதேவேளை, பொன்சேகாவுக்கு முன்னர் இராணுவத் தளபதிகளாக இருந்தவர்களினதும் முக்கிய படையதிகாரிகளாக இருந்தவர்களினதும் சில பங்களிப்புகளும் இறுதி வெற்றிக்கு முக்கிய காரணமாகின.

உதாரணமாக, மேஜர் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவ யாழ்ப்பாணத்தை அண்டிய தீவுகள் அனைத்தையும் 1980களின் இறுதியில் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருந்தார். இறுதிவரை அவற்றைப் புலிகளால் கைப்பற்றிக் கொள்ள முடியவில்லை.

ஈ.பி.டி.பியும் அவற்றைப் புலிகள் மீண்டும் கைப்பற்றிக் கொள்ளாதிருக்க பெரும் உதவியாக இருந்தனர். இவை ஆவணப்படுத்தப்படுமா என்பது சந்தேகமே.

மேஜர் ஜெனரல் ஜெரி டி சில்வா, கிறிஸ்தவர் என்பதால், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் அவரை, இராணுவத் தளபதியாக நியமிப்பதை தென்பகுதி தீவிரவாதிகள் எதிர்த்தனர். ஆனால், அவரது காலத்தில் தான், யாழ். குடாநாட்டைப் புலிகள் இழந்தனர். இறுதி வரை புலிகளால், குடாநாட்டை மீண்டும் கைப்பற்றிக் கொள்ள முடியவில்லை.

அது படையினரின் இறுதி வெற்றிக்குப் பேருதவியாக அமைந்தது. லயனல் பலகல்ல, இராணுவ தளபதியாக இருந்த போதே, புலிகளின் பகுதிகளுக்குள் ஆழ ஊடுருவும் படையணி அமைக்கப்பட்டது. அது, படைகளுக்குப் பலத்த சக்தியாக மாறியிருந்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2002 ஆம் ஆண்டு புலிகளுடன் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை, புலிகளின் பலத்தைப் பெருமளவில் அழித்து விட்டது. வெளி உலகைக் கண்ட புலிகளின் முக்கிய தளபதியான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூரத்தி முரளிதரன், புலிகளில் இருந்து பிரிந்தார். கருணா, பிரபாகரனுக்கு அடுத்தவராக இருந்ததாக பின்னர், தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார்.

அந்த ஒப்பந்தத்தின் காரணமாக, புலிகள் மீதான சர்வதேசக் கண்காணிப்பு உத்தியோகபூர்வமாகியது. அனுபவம் வாய்ந்த பல புலிப் போராளிகள், திருமணமாகி குடும்ப வாழ்க்கைக்குள் அக்காலத்தில் புகுந்துவிட்டனர். ஒப்பந்தம் கடலை உள்ளடக்கவில்லை. அதனால் புலிகளின் கப்பல்கள் அக்காலத்திலேயே அழிக்கப்பட்டன.

இவை, ரணிலின் ஒப்பந்தத்தால் ஏற்பட்ட விளைவுகளாக இருந்தும், ரணில் அவற்றுக்காக உரிமை கோராததாலும் ரணிலுக்கு பெருமை சேர்க்க, மஹிந்த விரும்பாததாலும் அந்த விடயங்கள் எவரது கண்ணிலும் படாமல் இன்றுவரை இருக்கின்றன. இவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவணப்படுத்தப் போகும் வரலாற்றில் உள்ளடக்கப்படுமா என்பது சந்தேகமே.

தமது தோல்விக்குப் புலிகளும் காரணமாகியிருந்தனர். அவர்கள் ராஜீவ் காந்தியை கொன்று, இந்தியாவைப் பகைத்துக் கொண்டனர். பின்னர், இந்தியா புலிகளை அழிக்கப் பெரும் பங்காற்றியது. புலிகள், சாதாரண சிங்கள மக்களைக் கொன்று, புலிகளின் போராட்டத்தை ஆரம்பத்தில் ஆதரித்த சிங்கள முற்போக்குச் சக்திகளைப் பகைத்துக் கொண்டனர்.

முஸ்லிம்களை இம்சித்தும் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றியும் முஸ்லிம்களைப் பகைத்துக் கொண்டனர். தமிழ் புத்திஜீவிகளைக் கொன்று, அவர்களையும் பகைத்துக் கொண்டனர்.

அதேவேளை, புலிகள் 30,000 படையினர் பங்கு கொண்ட ‘ஜயசிக்குறு’ படை நடவடிக்கையை முறியடித்தனர். 11,000 படையினர் நவீன ஆயதங்களுடன் பாதுகாத்து வந்த ஆனையிறவு முகாமைத் தகர்த்தெறிந்தனர். சுமார் 1,500 படையினர் இருந்த முல்லைத்தீவு முகாமை அழித்தனர். அதிலிருந்து 250 படையினர் மட்டுமே உயிருடன் திரும்பி வந்தனர்.

அனுராதபுரம், கட்டுநாயக்க விமான நிலையங்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் சாதாரண படை நடவடிக்கைகள் அல்ல; இவை அவற்றின் உண்மையான தாக்கங்களுடன் ஆவணப்படுத்தப்படும் என்று கூற முடியாது.

-tamilmirror.lk

TAGS: