துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் உலோகப் பொருட்களுக்கு அமெரிக்கா இரட்டிப்பு வரிவிதித்ததை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் மின்னணுப் பொருட்களை புறக்கணிக்க துருக்கி முடிவு செய்துள்ளது.
துருக்கியில் ராணுவ புரட்சி மூலம் கடந்த 2016-ம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டு பின்னர் மக்கள் செல்வாக்குடன் அது முறியடிக்கப்பட்டது. இதற்கிடையே, ஆட்சி கவிழ்ப்பிற்கு திட்டம் தீட்டிய துருக்கிய அரசியல் குழு ஒன்றுடன் அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் என்பவர் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு காரணமாக கூறப்படும் துருக்கியின் நீதித்துறை மற்றும் உள்துறை அமைச்சர்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. மேலும், துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் உலோகப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா இரட்டிப்பாக உயர்த்தியுள்ளது.
ஆனால், ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை விமர்சனம் செய்து தொடர்ந்து ஈரானிடம் இருந்து துருக்கி கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவெடுத்ததற்கு, பழி வாங்கும் செயலாக தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தடைகளை வித்தித்துள்ளது என துருக்கி குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் தடையினால் ஆசிய வர்த்தகத்தில் எப்போதும் இல்லா அளவிற்கு டாலருக்கு நிகரான துருக்கியின் நாணயமான லிராவின் மதிப்பு கடும் சரிவை கண்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மின்னணுப் பொருட்களை புறக்கணிக்க துருக்கி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது :-
துருக்கியின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் எவ்வித மிரட்டல்களுக்கும் துருக்கி பணிந்து போகாது. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மின்னணு பொருட்களை புறக்கணிப்போம்.
ஐபோன்களுக்கு பதிலாக சாம்சங் அல்லது துருக்கியின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செல்போன்களை பயன்படுத்தலாம். நாட்டில் பணவீக்கம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை இருப்பது உண்மை தான், இருப்பினும் சரிவை சந்தித்துள்ள லிராவின் மதிப்பை உயர்த்தும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-athirvu.in