இன்று மூன்றரை தசாப்தங்களுக்கு முன்பிருந்தே ஈழத்தமிழர்கள் தாயகத்தில் இருந்து புலம் பெயர ஆரம்பித்திருந்தார்கள். இந்தியாவின் தமிழ்நாடு உட்பட உலகின் மூலை முடுக்கெல்லாம் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஐரோப்பா கண்டம் மற்றும் வட அமெரிக்க கண்டம் போன்றவற்றுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் படிப்படியாக முன்னேறி தமது தனித்துவத்தை நிலை நாட்டும் வகையில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள். பலர் தொழில் அதிபர்களாக இருக்கிறார்கள் பலர் அரசியலில் குறித்த நாடுகளில் ஈடுபடுகிறார்கள், இன்னும் அங்கு வாழும் மக்கள் பலரும் குறித்த நாட்டின் பிரஜா உரிமை பெற்றிருப்பதோடு, குறித்த நாட்டின் அரசியல் தலைமைகளை (ஜனாதிபதி,பிரதமர்) தெரிவு செய்வத்தில் கூட செல்வாக்கு செலுத்துகிறார்கள். வாக்குரிமை பலத்தை கொண்டிருக்கிறார்கள்.
என்னதான் நாம் புலம் பெயர்ந்தாலும் என் குழந்தை நல்ல பாடசாலையில், ஏனைய இன குழந்தையோடு சேர்ந்து படிக்கிறது, எனக்கு இருக்க ஒரு இடம் உள்ளது, ஓட ஒரு வாகனம் உள்ளது, சுயமாக சம்பாதிக்க ஒரு தொழில் உள்ளது, ஊரில் உள்ள உறவுகளுக்கும் காசு அனுப்ப வழி இருக்கிறது. என்ற மன உறுதியோடு பலரின் புலம் பெயர் வாழ்க்கை செல்கிறது.
ஆனால் புலம் பெயர்ந்து பல தசாப்தங்கள் கடந்தும் வெறும் ஆயிரம் ரூபாவும் ,அரிசியும் என்ற ஒரு வட்டத்துக்குள்ளேயே ஈழத்தமிழ் இனம் சார்ந்த ஒரு மக்கள் கூடடம் வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தொப்பிள் கொடி உறவுகள் ஆளும் தமிழ் நாட்டில்.
இவர்களை தமிழக தமிழ் தலைமைகளும் கண்ணோக்குவதில்லை, ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளும் கண்ணோக்குவதில்லை. வாக்கு வங்கி இவர்களிடமும் இருந்திருந்தால் இவர்களையும் தேடியிருப்பார்கள் ஆனால் எதுவும் அற்ற ஒதுக்கப்பட்ட ஒரு கூடடமாக தானே இவர்கள் இருக்கிறார்கள்.
திராவிட தலைமைகளுக்கு துதி பாடும் எம்மவருக்கும் இது கண்ணுக்கு தெரிவதில்லை. ஐயா வைக்கோ, அண்ணன்களான சீமான்,
திருமாவளவன் போன்றோருக்கும் கூட இந்த இடங்கள் பெரிதாக தெரியாது ஐரோப்பா, கனடா தெரிந்த அளவுக்கு.
அவ்வப்போது தமிழ்நாடு டிவி செனல்கள் தமது நாடகத்திலும், சில போட்டி நிகழ்ச்சிகளிலும் தமது சுயலாபம் கருதி இவர்கள் சார்ந்து பேசுகிறார்கள், அல்லது போட்டிகளில் சில குழந்தைகளை பங்கு பற்ற வைக்கிறார்கள், அதை பார்த்த நாமும் ஆகா, ஓகோ என அந்த காட்சிகளை கண்ணீர்மல்க பார்த்து விட்டு எமது வேலைகளை பார்த்து விட்டு போய் விடுகிறோம் .
இங்கு பல உளவியல் பிரச்சனைகள் இருப்பதாக சொல்கிறார்கள், குழந்தைகள் கற்பதற்கான வசதி இல்லை என்று சொல்கிறார்கள், அப்படி கஷ்டப்பட்டு படித்த்து மருத்துவம் போன்ற கற்கை நெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்டாலும் ஈழத்தமிழ் அகதி அல்லது அகதி முகாமை சேர்ந்தவர் என ஒதுக்க படுகிறார்கள். இதில் எழுத இன்னும் பல விடயங்கள் உள்ளது.
இந்த மக்கள் கூட்டம் இப்படியே ஒரு அடிமை வாழ்வு வாழ்ந்து சாவதுதான் விதியா? இவர்களுக்கும் மறுமலர்ச்சி உள்ளதா? இவர்கள் வாழ்வில் எப்போ சூரிய உதயம்?
-http://eelamnews.co.uk