ஆவா குழுவை அடக்க பொலிஸார் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை!

யாழ் மாவட்டத்தில் ஆவா குழுவுடன் தொடர்புபட்ட 50 ற்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாண்டின் இதுவரையான காலப் பகுதியில் இந்த கைதுகள் இடம்பெற்றதாக வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோ கூறியுள்ளார்.

யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் சடுதியாக அதிகரித்துள்ளன. இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் விடுவிக்கப்பட்ட போதிலும் வாள்வெட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்தன.

இந்த நிலையில் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் ஆவா குழுக்களுடன் தொடர்புபட்ட 50ற்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டதாக வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோ ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் பொலிஸ் பிணை மற்றும் நீதிமன்ற பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை மேலும் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆவா குழு தொடர்பில் தகவல்களை பொலிஸாருக்கு வழங்குமாறு கோரும் விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் வாள் வெட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் குறைவடைந்துள்ளதாக வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

ஆவா குழுவின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை யாழ்ப்பாணம் – நீர்வேலிப் பகுதியில் வைத்து கடந்த மே மாதம் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் வி.இராமகமலன் முன், நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

-athirvu.in

TAGS: