“கருணாநிதி தன்னுடைய அரசியலைச் செய்தார்; எம்.ஜி.ஆர் தனது அரசியலைச் செய்தார்; ஜெயலலிதா தனது அரசியலைச் செய்தார்; ஈழத்தமிழர்கள் தங்களுடைய அரசியலைச் செய்யட்டும்”.
கலைஞர் மு.கருணாநிதியின் மறைவை முன்னிறுத்தி, தமிழக – ஈழ உறவுகள் தொடர்பாக, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் எழுதியிருந்த கட்டுரை, இவ்வாறு தான் நிறைவு செய்யப்பட்டிருந்தது.
இந்த இடத்தில், ஈழத் தமிழரின் அரசியல் என்ன, அது எவ்வாறு கையாளப்படுகிறது என்பது இங்குள்ளவர்களாலும், வெளியில் உள்ளவர்களாலும் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
விடுதலைப் புலிகளின் காலத்தில், ஓர் அரசியல் பின்பற்றப்பட்டது. ஈழப் போராட்டத்துக்கு ஆதரவான சக்திகளை, தராசின் ஒரு பக்கமும் எதிரான சக்திகளை இன்னொரு பக்கமும் நிறுத்தி வைத்து, அது எடை போட்டது.ஆனால், விடுதலைப் புலிகளுக்குப் பிந்திய ஈழத்தமிழர் அரசியல், குழப்பம் நிறைந்ததாகவே இருந்து வருகிறது.
தமிழகத்தைக் கையாளுவது உள்ளிட்ட அரசியலை, தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாகப் பார்க்கப்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலோ, வேறெந்தத் தமிழ்க் கட்சிகளாலோ, சரியாக முன்னெடுக்க முடியவில்லை.
முன்னர், தமிழக – ஈழ அரசியல் தலைவர்களுக்கிடையில், நெருக்கமான உறவுகள் இருந்தன. 2009 க்குப் பின்னர், தமிழக அரசியல் தலைவர்களுடன், ஈழத் தமிழ் அரசியல்வாதிகளால், நெருக்கமான உறவுகளைப் பேணமுடியவில்லை.
கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு துருவநிலை அரசியல் தலைமைகளுக்கிடையில், சீரான உறவுகளைப் பேணக்கூடிய வழிமுறையை, இவர்களால் கண்டறிய முடியாததே அதற்குக் காரணம். இவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, விடயங்களைக் கையாளக்கூடிய வாய்ப்புகளையும் ஈழத்தமிழ் அரசியல் தலைவர்கள் தவற விட்டனர்.
ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக இருந்த வரை, கூட்டமைப்பின் தலைவர்களையோ, முதலமைச்சர் விக்னேஸ்வரனையோ அவர் சந்திக்கவுமில்லை; அதற்கு வாய்ப்பு அளிக்கவுமில்லை. அதேவேளை, கருணாநிதியுடனும் இவர்கள் தொடர்புகளை நெருக்கமாக வைத்துக் கொள்ளவில்லை.
இதனால், இரண்டு முக்கிய தலைமைத்துவ ஆளுமைகளில் இருந்தும், ஈழத்தமிழரின் பிரதான அரசியல், விலகியே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் இடையிலான அரசியல் மோதல்களும் இத்தகைய விலகியிருந்தலுக்கு ஒரு காரணமாக இருந்தாலும், ஈழத் தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில், இது ஒரு பெரும் இடைவெளியே.
ஈழத் தமிழரின் அரசியல் உரிமைப் போராட்டத்தில், தமிழகத்தின் இரண்டு பெரும் அரசியல் இயக்கங்களான தி.மு.கவும் அ.தி.மு.கவும் ஏதோ ஒரு வகையில் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கின்றன. ஆனால், அந்த ஆதரவுத் தளத்தை, நெருக்கமான உறவுகளை, 2009 க்குப் பின்னர் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதில், ஈழத் தமிழ் அரசியல் தவறி விட்டிருக்கிறது.
ஈழத் தமிழர் ஆதரவுக் கோசங்களுடன் புதிதாக முளைத்த கட்சிகள், தலைவர்களுடன் கைகோர்ப்பதில் அக்கறை காட்டிய ஈழத் தமிழ் அரசியல் சக்திகள், தமிழகத்தின் பிரதான அரசியல் சக்திகளை மறந்துபோயின. இந்த இடைவெளியின் தாக்கத்தை, இப்போதைக்கு உணர முடியா விட்டாலும், எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் உருவாகக்கூடும்.
2016இல் ஜெயலலிதாவின் மறைவின் போதும், அண்மையில் மு.கருணாநிதியின் மறைவின் பின்னரும், ஈழத்தமிழ் அரசியல் சக்திகள் நடந்துகொண்ட முறை, ஒன்றுக்கொன்று எதிர்மாறானது.
இவர்களின் மறைவுகளின் போது, மிதவாத ஈழத் தமிழ்த் தலைமைகள், வெறும் இரங்கல் அறிக்கையுடன் நிறுத்திக் கொண்டன. சம்பந்தன், விக்னேஸ்வரன் உள்ளிட்ட யாரும், இறுதிச் சடங்குகளில் பங்கேற்க நேரில் செல்லவில்லை. தமது பிரதிநிதிகளையும் அனுப்பி வைக்கவில்லை.
ஜெயலலிதாவின் மறைவை, மிகப்பெரிய துயரத்துடன் வெளிப்படுத்தி அஞ்சலிக் கூட்டம், அறிக்கைகள் என்று விளாசிய பெரும்பாலான ஈழத் தமிழ் அரசியல் சக்திகள், கருணாநிதியின் மறைவின்போது, ‘கள்ள’ மௌனத்தைக் கடைப்பிடித்தன.
பெரும்பாலானவர்கள் இரங்கல் அறிக்கையைக் கூட வெளியிடவில்லை. குறிப்பாக, புலம்பெயர் தமிழர்கள் எட்ட நின்று கொண்டனர். கிட்டத்தட்ட ஆறு நாட்களுக்குப் பின்னரே, நாடு கடந்த தமிழீழ அரசு இரங்கல் அறிக்கையை வெளியிட்டது.
‘டெலோ’ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மாத்திரம், கருணாநிதியின் இறுதிச்சடங்கில் ஏனைய மலையக அரசியல் தலைவர்களுடன் இணைந்து பங்கேற்றிருந்தார். ‘டெலோ’வுக்கும் கருணாநிதிக்கும் நெருங்கிய உறவுகள் இருந்தமையே, அவரது பங்கேற்புக்கு முக்கிய காரணம்.
2009க்குப் பிற்பட்ட அரசியல் என்பது, ஈழத் தமிழரின் பிற்போக்கு நிலையைத் தெளிவாகக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. அதாவது, ஓர் இறுதிச் சடங்கைக் கூட, கைகட்டி வேடிக்கை பார்க்கின்ற நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. தாய்த் தமிழகம் என்றும் தொப்புள் கொடி உறவுகள் என்றும் போற்றப்பட்ட ஈழத்தமிழர் – தமிழகம் இடையிலான உறவு, இப்போதும் அந்த நிலையில் தான் இருக்கிறதா என்ற கேள்வியையே எழுப்ப வைத்திருக்கிறது.
ஈழத் தமிழருக்கான அரசியல் என்பது, வெறுமனே வடக்கு, கிழக்கு என்ற எல்லைகளுடன் குறுகியதாக இருக்குமேயானால், நீண்டகால நோக்கில், ஈழத் தமிழரின் அரசியல், பலமிழந்து போகும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்.
ஈழத் தமிழரின் போராட்டம் பலம் பெறுவதற்கு, தமிழகத்தின் பின்புல ஆதரவு கணிசமாகக் கைகொடுத்தது என்பதை எவரும் எப்போதும், மறந்து விட முடியாது. அரசியல், விநியோக ரீதியிலான ஆதரவுகள் என்று பல்வேறு வழிகளிலும், ஈழத் தமிழரின் போராட்டத்துக்கு, தமிழகம் கைகொடுத்திருந்தது.
அவ்வாறான ஆதரவு என்பது, தமிழக அரசியலையும் அரசியல் தலைவர்களையும் தாண்டியது. ஜெயலலிதா, விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தபோது கூட,
அ.தி.மு.கவில் இருந்த காளிமுத்து போன்ற பல தலைவர்கள், பிரமுகர்கள், தீவிரமான உதவிகளை வழங்கினார்கள்.
அதுபோலத் தான், கருணாநிதி பாராமுகமாக இருந்த தருணத்திலும், தி.மு.கவின் பல தலைவர்கள், உதவிகளை வழங்கினார்கள். ஈழத்தமிழர் ஆதரவு என்பது, தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சிகளிலும், கடைசி மட்டத் தொண்டர்கள் வரை ஊறிப் போயிருந்தது.
கட்சிகளின் தலைமைகள் பலவேளைகளில் ஈழத் தமிழர் தொடர்பாக எடுத்த நிலைப்பாடுகள், கடுமையானதாக இருந்திருக்கலாம்; ஈழத் தமிழ் மக்களால் ஜீரணிக்க முடியாததாக இருந்திருக்கலாம்; ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், அதற்காக ஒட்டு மொத்த தமிழகத்தையோ, குறிப்பிட்ட ஓர் அரசியல் கட்சியையோ புறக்கணித்து விட முடியாது.
ஒரு சில தலைவர்களை முன்னிறுத்தி, அவர்கள் சார்ந்த அரசியல் இயக்கங்களைப் புறக்கணிக்கும் முடிவை, ஈழத் தமிழர்கள் எடுப்பார்களேயானால், அது ஈழத் தமிழ் அரசியலின் தோல்வியாகத் தான் அமையும்.
ஜெயலலிதாவை முன்னிறுத்தியும் கருணாநிதியைப் பின்னிறுத்தியும் அண்மைக்காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தான், தமிழகத்துக்கும், ஈழத் தமிழர் அரசியலுக்கும் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், தமிழகத்தில் ஈழத்தமிழர் ஆதரவு, பரவலான ஒன்றாக இருந்தது. அதற்காக, ஈழத் தமிழர் விவகாரத்தை தமிழக மக்கள், தமிழக அரசியலுடன் போட்டுக் குழப்பிக் கொள்ளவில்லை.
2009க்குப் பின்னர், ஈழத்தமிழரில் ஒரு தரப்பினர், குறுகிய அரசியல் வட்டத்துக்குள்ளேயே ஒட்டுமொத்தத் தமிழகத்துடனான அரசியல் உறவுகளைக் கையாள முயற்சித்தனர். இன்னொரு பகுதியினர் கருணாநிதி, ஜெயலலிதா மோதலுக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் நழுவிக் கொள்வதே புத்திசாலித்தனம் என்று ஒதுங்கியிருந்தனர். இதனால், ஈழத் தமிழரின் போராட்டம் சார்ந்து, தமிழகத்தில் ஓர் ஆதரவுத் தளத்தை, அலையை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஈழத் தமிழர் நலன்களில் அக்கறையுள்ளவர்கள் கூட, ஈழத் தமிழ் அரசியலின் இந்தப் போக்கால், ஒதுங்கி நிற்க விரும்புகின்ற நிலைதான் காணப்படுகிறது.
ஈழத் தமிழருக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவு மிக நீண்டது; வலுவானது; வலிமையானதும் கூட.
கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு பெரும் தமிழக அரசியல் தலைமைகளுக்குப் பின்னர், அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரண்டு அரசியல் இயக்கங்களும் முன்னைய இறுக்கமான மோதல் போக்கில் இருந்து சற்று தளர்ந்திருக்கின்றன.
இத்தகைய சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் தமக்கான அரசியலைப் புதிதாகவேனும் ஆரம்பிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
ஈழத் தமிழரின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தில், தமிழகம் பக்க பலமாக இருக்கக் கூடியது.
இத்தகைய நிலையில், ஈழத் தமிழர் அரசியல், எவ்வாறு தமிழகத்தில் மீண்டும் இடம்பிடிக்கப் போகிறது என்பது முக்கியமானது.
ஒதுங்கி நிற்கும் போக்கைக் கைவிட்டு, விருப்பு வெறுப்புகளுக்கு இடம்கொடுக்காமல், நட்புச் சூழலை விரிவுபடுத்தும், தனித்துவமான அரசியலைக் கையாள வேண்டிய அவசியத்தை, ஈழத் தமிழ்த் தலைமைகள் இனியாவது உணருமா என்று தெரியவில்லை.
-tamilmirror.lk