வெற்றிடத்திற்கு ஏற்ற தகைமை உடையவர்கள் வடக்கில்லை – விக்கி

தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வடக்கு மாகாணசபை அநீதி இழைத்துள்ளதாக பலர் கூறிவருகின்றனர். உண்மையில் வெற்றிடத்திற்கு ஏற்ற தகைமை உடையவர்கள் இல்லை என்பதால் தான், அதை நிரப்ப முடியாமல் இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு முதலமைச்சர் ஊடகங்களுக்கு வழங்கும் வாராந்த கேள்வி பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கேள்வி பதிலில் முதலமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

“பதவி வெற்றிடங்கள் என்பது ஒரு நிலை. வேலை வாய்ப்பற்றவர்கள் என்பது பிறிதொரு நிலை. இரண்டையும் சேர்த்து எம்மைக் குறை கூறாதீர்கள்.

குறிப்பிட்ட பதவி வெற்றிடங்களுக்கு வேலைவாய்ப்பற்றவர்கள் தகைமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். வேலையற்றிருப்போர் யாவரும் எமக்கிருக்கும் பதவி வெற்றிடங்களை நிரப்பத் தகைமை பெற்றவர்கள் என்று நினைத்து எம்மைக் குறை கூறுவது முறையாகாது.

பல வெற்றிடங்களை நிரப்பத் தேவையான தகைமை உடையவர்கள் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். இது கல்வித் தேர்ச்சியில் உயர் நிலை அடைந்தவர்களுக்கும் பொருந்தும், கல்வி நிலையில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி பயின்று உயர் நிலையை அடையும் பலர் வெளிநாடுகளுக்குச் செல்வது உங்களுக்குத் தெரியும். அவர்களால் நிரப்பக்கூடிய வெற்றிடங்களும் எமது வெற்றிடப் பட்டியலில் இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் இல்லாததால் குறிப்பிட்ட வெற்றிடங்களை நிரப்ப முடியாதிருக்கின்றது. அதே போல் தொழிற்கல்வி கற்று சில தொழில்களில் தேர்ச்சி பெற்ற பலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைகள் தேடிச் செல்வதால் இங்கு ஏற்படும் வெற்றிடங்கள் பல தொடர்ந்து நிரப்பப்படாது இருப்பதையும் நீங்கள் உணர வேண்டும்.

தொழில்த் திறன் உள்ளவர்கள் இல்லாததால் வடமாகாணம் படும் அவஸ்தையை நீங்கள் உணர வேண்டும். தாதிகளுக்கு வெற்றிடம் உண்டு. தகுந்த தமிழில் பேசும் தாதிகள் இல்லாததால் நாம் மாகாணத்திற்கு வெளியில் இருந்து தாதியரை அழைத்து வந்து வெற்றிடங்களை நிரப்புகின்றோம். நிரப்பிய பின்னரும் வெற்றிடங்கள் பல உண்டு.” என தெரிவித்தார்.

-http://eelamnews.co.uk

TAGS: