“தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று நினைத்தால் தீர்க்கலாம். ஆனால், அந்த எண்ணம் இலங்கை அரசாங்கத்துக்கு அறவே இல்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதனைச் செய்வது சாதாரண விடயமல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ராஜித சேனாரத்னவின் கருத்து தொடர்பில் முதலமைச்சரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்வுகள் தொடர்பில் நான் ஏற்கனவே கூறியிருக்கின்றேன். அந்த வகையில் எமது பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற கடப்பாடு இருந்தால் எதையுமே செய்து முடிக்கலாம். ஆனால் அதனைச் செய்யக் கூடாதென்று நினைத்தால் அது தாமதமாகும். மேலும் பெரிய பெரிய காரணங்களையும் சொல்லிக் கொள்ளக்கூடும்.
ஆனாலும் அவர் சொல்வதை நான் மறுக்கவில்லை. ஏனெனில் அரசியலமைப்பு உருவாக்கம் என்பது ஒரு முக்கியமான விடயம். ஒரு நாட்டினுடைய வருங்காலத்தை நிர்ணயிக்கும் ஆவணம் அது. அதிலே அவர் ஒரு விடயத்தை மறந்து விட்டாரோ தெரியவில்லை. இது சம்மந்தமாக நாங்கள் பல வருட காலமாக பேசி வருகின்றோம்.
குறிப்பாக பதினெட்டு தடவைகள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த காலத்திலே தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் அவர்கள் பேச்சுக்களை வைத்திருந்தார்கள். அதற்கு என்ன நடந்தது என்று கூட எங்களுக்குத் தெரியாது. அவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்தவும் இல்லை. அதுக்குப் பிறகும் இவையெல்லாம் நடந்து வருகிறது. இதே போன்று சந்திரிக்கா காலத்திலும் பலதும் நடந்தது.
ஆனால் அதைச் செய்ய வேண்டுமென்ற கடப்பாடும் எண்ணமும் இருக்கின்றதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. ஆகவே அவர் கூறுவதை நான் பிழை என்று கூறவில்லை. ஆனால் எந்த அளவிற்கு அது தட்டிக்கழிக்கும் பேச்சு என்பதைத்தான் நான் யோசிக்கின்றேன்.
எங்களுக்குப் போதுமான அளவு தரவுகள் இருக்கின்றன. என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்கு தெரியும். அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தால் அவற்றை நீக்கி உடனயே செய்யக் கூடிய ஒரு சூழல் தான் இருக்கின்றது.
அத்துடன், இந்த அரசாங்கம் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் இவற்றைச் செய்ய வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருக்கின்ற படியால் கட்டாயம் அவர்கள் ஏதாவது செய்தே தீர வேண்டும். அந்த அடிப்படையிலையே எவ்வளவு தான் இது பிரச்சனையான விடயமென்று அவர்கள் கூறினாலும் இதனைச் செய்தே தீர வேண்டும். செய்வார்கள் என்றும் நம்புகின்றேன்.” என்றுள்ளார்.
-4tamilmedia.com