டிசம்பருக்குள் 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு – 780 மில்லியன் ரூபாவை ஒதுக்க திறைசேரி இணக்கம்

வடக்கு- கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள – உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் உள்ளிட்ட, 500 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று புனர்வாழ்வு, மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

”தனியார் காணிகளில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம்களை வேறு இடங்களுக்கு நகர்த்தி, டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக, அந்தக் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக, அரசாங்கம் 780 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இராணுவ முகாம்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையைப் பூர்த்தி செய்வதற்காக, இந்த நிதியை விடுவிப்பதற்கு திறைசேரி அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் காணிகளை விடுவித்து, சிறிலங்கா இராணுவம் தமது பாதுகாப்பு எல்லைகளை மீள ஒழுங்குபடுத்தும்.

விடுவிப்பதற்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணிகள், யாழ். மாவட்டத்தில், வலி வடக்கில், அச்சுவேலி, மயிலிட்டி வடக்கு,  பகுதிகளிலும், தென்மராட்சியில் கிளாலி, பளை, முகமாலைப் பகுதிகளிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில், முறக்கொட்டாஞ்சேனையிலும் உள்ளன.

இந்தக் காணிகளின் உரிமையாளர்களை உறுதிப்படுத்த, அந்தந்த பிரதேச செயலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

TAGS: