ஒலுமடு வெடுக்குநாறிமலைக்காக போராட அழைப்பு!

தமிழர் தொன்மையை அழிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து எமது பாரம்பரியத்தை பாதுகாக்க ஒன்றிணைய கோரிக்கை

தமிழர் தொன்மையை அழிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து எமது பாரம்பரியங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு வவுனியா வடக்கு ஒலுமடு வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தின் செயலாளரும், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினருமான து.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

நாளை செவ்வாய்க்கிழமை (21.08) வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெறும் தமிழர் தொன்மையின் அடையாளமான வெடுக்குநாறி மலை மற்றும் ஆதிசிவன் ஆலய மீட்பு போராட்டம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

தமிழர்கள் தனித்துவமான கலை கலாசார பண்பாடு பாரம்பரியங்களுடன் இந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு எமது தேசத்தில் காணப்படும் பல்வேறு சான்றுகள் இன்றும் பறைசாற்றி நிற்கின்றன.

யுத்தம் மற்றும் இதன் தாக்கத்தில் இருந்தும் மீள தமது வாழ்வியலை மீட்டெடுக்க முனையும் தமிழ் சமூகம் தனது காலாசார பாரம்பரியங்களில் இருந்து என்றும் விலகாது அதனை போற்றிப்பாதுகாத்து வருகின்ற நிலையில் பேரினவாத சக்திகளின் எதேச்சதிகார செயன்முறைகளின் ஊடாக தமிழர்களது கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையினை சிதைக்க முனைவதை நாம் அவதானித்து வருகின்றோம்.

இவ் வகையிலேயே 200 வருடங்களுக்கும் மேலாக எமது பிரதேசத்து மக்களால் வழிபாடுகளில் ஈடுபட்டு வரப்படும் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆசி சிவன் ஆலயத்திற்கும் ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

வெடுக்குநாறிமலை என்பது நாகர் காலத்துடன் ஒப்பிட்டுப்பார்க்க கூடிய ஒரு விடயமாகவும் அதில் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுவதனையும் தமிழர் தொன்மை தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் யுத்த காலத்திலும் அதன் பின்னரான காலத்திலும் அப்பகுதி மக்களால் இவ் ஆலயப்பகுதி தெய்வீக பிரதேசமாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

இந் நிலையில் ஆடி அமாவாசை உட்பட ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இப் பிரதேசத்தில் உள்ளவர்களால் இங்குள்ள ஆதி விக்கிரகங்களுக்கு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டு வருவதுடன் சுமார் 300 அடி உயரத்தில் உள்ள மலைக்குன்றில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் ஆதி சிவனுக்கும் உமை அம்மைக்கும் பயபக்தியுடனும் மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் சென்று வழிபாடுகளை 5 தலைமுறைகள் கடந்தும் பல்லாண்டு காலமாக செய்துவரும் நிலையில் இன்று அதனை தொல்லியலுக்குரிய இடமாக ஆக்கிரமித்துக்கொள்ள இலங்கை தொல்லியல் திணைக்களம் முனைப்புக்காட்டி வருகின்றது.

தமிழர்களது மரபுசார்ந்த பல இடங்களையும் தொல்லியல் திணைக்களம் தமது ஆளுகைக்குள் உட்படுத்தி அதனை பாதுகாப்பதாக தெரிவித்து பௌத்த மேலாதிக்க சிந்தனைகொண்டு பௌத்த வழிபாட்டு இடங்களாக மாற்றியுள்ளதனை கிழக்கில் கன்னியா வென்னீரூற்றிலும் தமிழர் வழிபாட்டு இடமான கதிர்காமத்திலும் நாம் கண்டு வருகின்றோம்.

இந் நிலை வடக்கில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு ஏற்படக்கூடாது என்பதில் வடபுலத்து தமிழர்கள் உணர்ந்து தலைப்பட வேண்டிய தருணத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே செவ்வாய்க்கிழமை (21.08) வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக காலை 9 மணிக்கு இடம்பெறும் தமிழர் அடையாளமான வெடுக்குநாறி மலை மற்றும் ஆதி சிவன் ஆலய மீட்பு போராட்டத்தில் கட்சி பேதமின்றியும் மத பேதங்களை களைந்தும் தமிழர்களின் அடையாளத்தினை மீட்க ஒன்றிணைந்து வாருங்கள் என அனைவரையும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் கோரி நிற்கின்றேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://eelamnews.co.uk

TAGS: