போர் நினைவுச் சின்னங்களை அகற்றக் கோரும் விக்கியின் கடிதம் – மௌனம் காக்கும் மைத்திரி

வடக்கில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர், கடந்த 17ஆம் நாள், சிறிலங்கா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

வடக்கில் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளபோர் நினைவுச் சின்னங்கள், சிங்கள மேலாதிக்கத்தைக் காட்டுகின்றன.

நல்லிணக்கத்துக்கும், நிலையான அமைதிக்கும் இவை தடையாக இருக்கின்றன.

இந்த நினைவுச் சின்னங்களை பார்க்கின்ற போது தமிழ் மக்கள் கோபமும் முன்பமும் அடைகிறார்கள்.

தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள இந்த நினைவுச் சின்னங்கள், அவர்களுக்கு உள ரீதியாக தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால், இந்த நினைவுச் சின்னங்களை அகற்றுவதன் மூலம், நல்லிணக்கத்துக்கான சூழலை ஏற்படுத்த முடியும்.

எனவே, வடக்கில் உள்ள போர் நினைவுச் சின்னங்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்தக் கடிதத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரியிருந்தார்.

எனினும், இந்தக் கடிதத்துக்கு சிறிலங்கா அதிபரிடம் இருந்து இன்னமும் பதில் ஏதும் வரவில்லை என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று தெரிவித்தார்.

சிறிலங்கா அதிபர் இந்த விடயம் தொடர்பாக என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்று தெரியாது, ஆனாலும், இந்த விடயங்களைச் சொல்ல வேண்டிய கடமை எமக்கு இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

TAGS: