ஈழத்தை ஆப்கானிஸ்தான் ஆக்கும் சிங்கள இராணுவம்!

மகிந்த ராஜபக்சவின் காலத்தில் சிங்கள இராணுவக் கரங்கள் கொண்டு எவ்வாறு அடக்கப்பட்டார்களோ அவ்வாறே இன்றும் அடக்கப்பட்ட நிலையில் உள்ளனர் தமிழீழ மக்கள். இன்றைய அரசாங்கம் நல்லிணக்க அரசாங்கம் என்று போலி வேடம் தரித்துக் கொண்டு இராணுவத்தின் கரம் கொண்டு தமிழீழ மக்களை நசித்து அழித்து வருகின்றது. பொதுமக்களின் வாழ்க்கையில் இராணுவத் தலையீடு அதிகரிக்கும் சூழலில் இராணுவத்தளபதி முன்வைத்த சில கருத்துக்களைப் பாருங்கள்.

வடக்கு கிழக்கிலிருந்து இராணுவ முகாங்கள் அகற்றப்பட மாட்டாது என்று இலங்கை இராணுவத்தளபதி கூறியுள்ளார். வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாங்களை அகற்றுவது மாத்திரமல்ல, இராணுவத்தினரை வெளியேற்றுவதும் தமிழர்களின் கோரிக்கை. அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்று இராணுவத்தால் ஏற்படுத்தப்பட்டது. வீதியால் சென்று கொண்டிருந்த அப்பாவி குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார்.

அவர் தனக்குரிய தடத்தில் சென்று கொண்டிருந்தபோது, பாரிய இராணுவ வாகனம் ஒன்று பிரேக் பிடிக்காத நிலையில், மறுதடத்தில் பயணம் செய்த அந்த அப்பாவியை, போக்குவரத்து விதிகளுக்கு முற்றிலும் மாறான வித்தில் அடித்து அந்த இடத்திலேயே உயிர்ப்பலி எடுத்துக் கொண்டது இராணுவ வாகனம். இராணுவ வாகனங்கள் மோதி பலியானவர்களின் எண்ணிக்கை பல. ஆனால் அவைமீது எந்தச் சட்டங்களும் நடவடிக்கை எடுக்கவில்லை.

காடு, கடல், நிலம் எல்லாம் இராணுவத்தின் வசம். சிங்கள இராணுவம் தமிழர்களின் மண்ணில் நிலை கொண்டபடி செய்யும் அநியாங்கள் பல. விகாரைகளை கட்டுவதுதான் இப்போது இராணுவத்தின் பணி. கண்ட இடங்களிலும் புத்தர் சிலையை வைப்பதுதான் இராணுவத்தின் பணி. சைவ ஆலயங்களில் புத்த சிலைகளை நுழைக்க இராணுவத்தினர் பெரும்பாடு படுகின்றனர். ஆலயச் சூழலில் பாரிய இராணுவ முகாங்கள் காணப்படுகின்றன. கிளிநொச்சியில் கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு அருகாகவும் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருககாகவும் பாரிய இராணுவ முகாங்கள் உள்ளன.

வடக்கில் முன்பள்ளிகளை இராணுவத்தினர் நிர்வாகம் செய்கின்றனர். முன் பள்ளிக் குழந்தைகள் சூடியிருப்பதுவோ இராணுவ சின்னங்கள். இது எவ்வளவு பெரிய துயரம். எங்களை அழித்த, எங்கள் உறவுகளை வன்புணர்ந்த சிங்கள இராணுவத்தின் சின்னங்களை சூடியுள்ளனர் நம் பிள்ளைகள். வாழ்வில் முதன் முதலாக இராணுவத்தின் நடத்தும் பள்ளிக்கு செல்லும் துயர வாழ்வு. முன்பள்ளி ஆசிரியர்கள் இராணுவ சிந்தனையுடன் வழிநடத்தப்படுகின்றனர்.

இவ் முன்பள்ளிகளை மாகாண அரசிடம் கையளிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள ஜனாதிபதியிடம் இதனை பலமுறை கேட்டபோதும், அவர் கள்ளச் சிரிப்போடு கடந்து போகின்றார். மகிந்த ராஜபக்ச உருவாக்கிய இராணுவ முன்பள்ளித்திட்டங்களை இன்னமும் மைத்திரி நீடிக்கிறார் என்றால் இருவரது கொள்கையும் ஒன்றுதானே.

இலங்கையில் இராணுவத்தின் தலையீடு, இலங்கையை ஒரு பாகிஸ்தானாகவோ அல்லது ஆப்கானிஸ்தானாகவோ மாற்றும் என்று கூறியிருந்தார் வடக்கு அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன். வடக்கு மாகாணத்தில் அரசாங்கம் அதிகளவிலான இராணுவத்தை குவித்து வைத்துள்ளதாகவும் இராணுவத்தினருக்கு இங்கு எந்தவிதமான வேலைகளும் இல்லை என்றும் மத்திய அமைச்சர்களே வடக்கில் எந்தவிதமான அச்சுறுத்தல்களும் கிடையாது என கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

வடக்கில் உள்ள இராணுவத்தை 9 ஆக பிரித்து 9 மாகாணங்களுக்கு கொண்டு செல்லுமாறு ஏற்கனவே முதலமைச்ர் கூறியிருந்தார். உண்மையில் இராணுவத்திற்கு வேலை இல்லை என்று அவர்களை சிவில் நிர்வாகத்தில் தலையிட தூண்டுவது இது ஒரு நல்ல விடயமல்ல. உண்மையில் இலங்கை பாகிஸ்தானோ அல்லது ஆப்கானிஸ்தானோ இல்லை. இலங்கை இராணுவம் இந்த நாட்டு மக்களுடன் சண்டை பிடிக்கின்றது என்பதையே இராணுவ நிர்வாகம், இராணுவ ஆட்சி, இராணுவத் தலையீடு காட்டுகின்றது.

இரவு 12மணிக்கும் தமிழீழத்தில் பெண்கள் நடாமடும் சூழல் ஒன்று அன்று நிலவியிருந்தது. இன்று பட்டப் பகலிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகளும் இராணுவத்தினரால் தூண்டப்பட்டு நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளும் இன்று தமிழீழத்தை பெரும் துன்பத்திற்கு தள்ளியுள்ளது. அண்மையில் உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார்.

சிங்கள அரசு, இராணுவத்தை விலக்கி, தமிழர்களின் மண்ணில் பொதுநிர்வாக ஆட்சி மலரத் தடுப்பது ஏன்? தமிழீழ மக்களை தொடர்ந்தும் அழித்து ஒழிக்க விரும்புகிறதா? தமிழர்களை மீண்டும் ஆயுதம் ஏந்த சிங்கள அரசு விரும்புகிறதா? அனைத்துலக சமூகம் தமிழீழ மண்ணில் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும். இல்லையேல் மீண்டும் இங்கு ஆயுதம் ஏந்தி இராணுவத்தை துரத்தும் நிலை உருவாகும்.

ஆசிரியர்,
ஈழம்நியூஸ்.
25.08.2018

TAGS: