தாய்வானின் தென் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களின் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தாய்வான் அரசின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக ஷியாயி கவுண்டியில் உள்ள 11 நகரங்களில் 47 இடங்களில் பெரு வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள வீடுகள் மற்றும் பல வாகனங்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் நேற்று சனிக்கிழமை விஜயம் செய்திருந்தார்.
இதன்போது, தங்களின் நிலை குறித்து சினமடைந்திருந்த குடியிருப்பாளர்கள் தங்கள் நிலைமையை உயர்த்துவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தநிலையில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியம் குறித்து அரசாங்கத்தின் சார்பில் மன்னிப்பு கோரிய தாய்வான் பிரதமர் வில்லியம் லாய், உள்கட்டமைப்பு பற்றிய சமீபத்திய சூழ்நிலைகளை பார்வையிடுவதற்கு அதிகாரிகள் குழு ஒன்றை நியமித்துள்ளார்.
கடந்த வாரம் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக தாய்வானின் தென் பிராந்தியத்தில் கன மழை பெய்தது.
புயல் தாக்கம் அகன்ற போதிலும், பல இடங்களில் வெள்ள நீர் இன்னமும் வழிந்து செல்லாமல் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-athirvu.in