முதல்வர் விக்கியை வெளியேற்றுவது யாரின் குறிக்கோள்? சுமந்திரன் யாரின் எடுபிடி?

தமிழீழத்தில் இப்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது முதல்வர் விக்கி – சுமந்திரன் யுத்தமாகும். விரைவில் மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் வடக்கு மாகாண முதல்வர் விக்கியை வெளியேற்றி ஒரு பொம்மையை முதலமைச்சராக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது ரணில் அரசு. அதற்கான அடிவருடிகளாக சுமந்திரன் சார்ந்த குழுவினர் செயற்படுகின்றனர்.

முதலில் ஸ்ரீலங்காப் பிரதமர் ரணில் முதல்வர் விக்கியுடன் முரண்பட்டுக் கொண்ட நிகழ்வுகளை இங்கே நினைவுபடுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீலங்காப் பிரதமர் வடக்கிற்கு வரும்போது முதல்வர் விக்கியை சந்திப்பதை மறுத்து வந்தார். சில மேடைகளில் அருகில் இருந்த விக்கியுடன் பிரதமர் ரணில் பேசவில்லை. வடக்கு முதல்வருடன் பேசப் போவதில்லை என்றும் பகிரங்கமாக ரணில் கூறியிருந்தார்.

ரணில் – விக்கி முரண்பாடு என்பது தமிழ் சிங்கள இன முரண்பாட்டின் வெளிப்பாடு ஆகும். வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் முதலமைச்சராக பொறுப்பெடுத்தபோது கொண்டிருந்த கருத்து நிலைகளில் இருந்து பின்னர் பல மாற்றங்களை வெளிப்படுத்தினார். வடக்கு கிழக்கு மாகாண மக்களின் மனநிலைகளை உணர்ந்த பின்னரே தனது மாற்றம் என்றும் கூறினார். அதுவே யதார்த்தமும் தேவையான விடயமும் கூட.

முதல்வர் விக்கி, முதலமைச்சர் பதவியில் பொறுப்பேற்றபோதும், அப்போது தெரிவித்த கருத்துக்களும் தமிழீழ மக்களாலும் ஆதரவுப் பெருமக்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. ஆனால் விக்கி தன்னை மாற்றிக் கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களின் முதல்வர் ஆனார். வடக்கு கிழக்கு மக்களின் முதல்வர் விக்கிதான். அதுவே வடக்கு கிழக்கு மக்களின் உணர்வாக உள்ளது. அதன் பின்னர் அவர் மக்களின் பெரும் ஆதரவையும் பெற்றார்.

முதல்வர் விக்கிக்கு எதிராக கூட்டமைப்பில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூண்டுதலின்பேரில்,ரணிலின் பின்னணியில் கொண்டுவரப்பட்ட அந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் பின்னர் அழித் தொழிக்கப்பட்டது. சரி, வடக்கு முதல்வரை சுமந்திரன் ஏன் எதிர்க்க வேண்டும். கூட்டமைப்பில் உள்ள சில உறுப்பினர்கள் ஏன் எதிர்க்க வேண்டும்? மாகாண சபையில் உள்ள சில உறுப்பினர்கள் ஏன் எதிர்க்க வேண்டும்? இதன் பின்னணியில் யார் உள்ளனர்?

இலங்கைத் தீவில் முதல்வர் விக்கி யாருக்கு இடைஞ்சலாக உள்ளார்? அவர் எதனைப் பேசி அவ்வாறு வேண்டாத மனிதராக மாறினார்? முதல்வர் விக்கி, வடக்கு கிழக்கு மக்களின் அபிலாசைகளை நெத்திக்கு நேராக எடுத்துரைத்து வருகிறார். ஸ்ரீலங்கா அரசின் ஆக்கிரமிப்பையும் இன அழிப்பையும் உலகிற்றே அம்பலப்படுத்தி வருகிறார். இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக வரலாறு முழுவதும் இன அழிப்பு நடந்தது என்பதை அவர் பதிவு செய்துள்ளார்.

இலங்கை வரலாற்றின் கறைபடிந்த இன அழிப்பு பக்கங்களை வெளிப்படுத்துவது அவர் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட இன அழிப்புத் தீர்மானம் ஆகும். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தில் மௌனம் காக்கிறார். ஆனால் தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் சொன்னதைப்போல ரணில் ஒரு நரி. அந்த நரிக்கு முதல்வர் விக்கியை பிடிக்காது.

தமிழர்களை உடைத்து உடைத்து அழிக்கும் நரிவேலையை கருணாவை பிரித்து செய்தவர் ரணில். இப்போது முதல்வர் விக்கியை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிக்கவும், முதல்வர் பதவியிலிருந்து அகற்றவும், தமக்கு தேவையான பொம்மையை இருத்தி தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கவும் நரி ரணில் திட்டம் இடுகிறார் என்பது ஈழத்தவருக்கு தெரியும்.

அதன் எடுபிடியாக சுமந்திரன் செயற்படுகிறார். இதனால் தமிழ் இனம் மீண்டும் மீண்டும் இழப்புக்களுக்கும் பின்னடைவுகளுக்கும் முகம் கொடுக்க நேரிடும். அதுவே ரணிலின் நோக்கம். அதுவே ரணிலின் அரசியல். அதற்காக நாம் செய்வது சுமந்திரனது முதல்வர் விக்கிக்கு எதிரான யுத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும். ரணிலின் நரித்தனத்தை அழிக்க வேண்டும். முதல்வர் விக்கியை பாதுகாத்து தமிழ் இனத்தின் இன்றைய குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும்.

-http://eelamnews.co.uk

TAGS: