வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து விட்டுப் பொறுமையாகப் பதிலளிப்பேன் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், 2009ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்ட தலைமைத்துவம் மற்றும் அணுகுமுறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வி கண்டு விட்டது என்று கூறியிருந்தார்.
அவரது இந்தக் கருத்து தொடர்பாக ஊடகம் ஒன்று எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளித்துள்ள இரா.சம்பந்தன்,
”விக்னேஸ்வரன் தமது பக்க நியாயங்களைப் பட்டியலிட்டுள்ளார். நாங்கள் எமது பக்க நியாயங்களை முன்வைக்க வேண்டும்.
அதனை அவசரப்பட்டு செய்ய முடியாது, ஆற அமர்ந்து அலசி ஆராய்ந்து, உரிய நேரத்தில் பதில் கொடுப்பேன்.
அதேவேளை, முதலமைச்சர் வேட்பாளராக அவரைக் களமிறக்கியது தொடக்கம், முதலமைச்சராக்கியது வரை – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் தான், பங்களிப்புச் செய்தது என்பதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வடக்கு மாகாண முதலமைச்சர் என்னை வரும் 7ஆம் நாள் சந்திக்கவுள்ளதாக, ஊடகங்களைப் பார்த்துத் தான் அறிந்து கொண்டேன்.
ஆனால் சந்திப்புக்கான நேரம் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. அவர் விரும்பும் நேரத்தில் சந்தித்துக் கொள்வேன்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
-puthinappalakai.net