ஐ.எஸ் பயங்கரவாதியாக கைதான இலங்கை அமைச்சரின் மருமகன்!

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அது சர்வதேச ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள 25 வயது முஹமட் நிஜாம்டீன் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நெருங்கிய உறவினர் என அந்நாட்டு தேசிய ஊடகமான ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் ஐஎஸ் அமைப்பின் சார்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நிஜாம்டீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபத்தான தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் நிஜாம்டீன் கைது செய்யப்பட்டதாக அவுஸ்திரேலிய பொலிஸார் நேற்று அறிவித்திருந்தனர்.

அவர் அவுஸ்திரேலியாவையும் தாண்டி, இலங்கையுடனே அதிக தொடர்புகளை கொண்டிருந்தார் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இலங்கையின் முக்கிய பதவி நிலை வகிக்கும் அமைச்சர், வங்கி முகாமையாளரின் நேரடி உறவுக்காரர் என அந்நாட்டு தேசிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நிஜாம்டீன் இலங்கை வங்கியின் முன்னாள் தலைவர் ஜெஹான் காசிம் என்பவரின் பேரன் எனவும் ஏபிசி தெரிவித்துள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்டவரின் சகோதரரான ஒருவர், நிஜாம்டீன் செய்திருக்க மாட்டார் அவர் வெளிப்படையான முஸ்லிம் என பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார் எனவும் ஏபிசி தெரிவித்துள்ளது.

அவர் அவுஸ்திரேலிய நகரமொன்றிற்கு இவ்வளவு மோசமான குற்றங்களை இழைப்பது குறித்து சிந்திக்க வேண்டிய தேவையில்லை எனவும் அவர் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார் என ஏபிசி தெரிவித்துள்ளது.

நிஜாம்டீன் கைது செய்யப்பட்ட பின்னர் எங்களால் அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை நாங்கள் அநாவசிய சம்பவங்கள் காரணமாக மனமுடைந்து போயுள்ளோம் எனவும் அவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

ஆனாலும் நிஜாம்டீன் மிகவும் ஆபத்தான நபர் என, அவரிடமிருந்து மீட்கப்பட்ட நாட்குறிப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பலரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் சிட்னி நகரின் பல பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிஜாம்டீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் 15 வருட சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டி வரும் எனவும் குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

-eelamnews.co.uk

TAGS: