அம்பாறையில் நிலமீட்புப் போராட்டம்: கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றம் சாத்தியமா?

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 60ஆம் மைல் போஸ்ட், கனகர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், “அத்தனை குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாகக் குடியேற்றப்படும்போதே, எங்களது போராட்டம் முடிவுக்கு வரும்” என உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி தொடங்கப்பட்ட இவர்களின் நில மீட்புப் போராட்டம், நேற்றுடன் (03) 21 நாளை எட்டியபோதும், “இதுவரையில் யார் வந்தும், தீர்க்கமான முடிவையோ, தீர்வையோ வழங்கவில்லை” என்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை,  பிரதேச செயலாளர், வன பரிபாலன அதிகாரிகள் , வீடமைப்பு அதிகார சபையினர் வந்து கலந்துரையாடி இருக்கிறார்கள்.

“அரசாங்க அதிபர் இதுவரையில் எம்மை வந்து சந்திக்கவில்லை. வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள், 30 வீடுகள் அமைத்துத் தரவுள்ளதாகக் கூறியுள்ளனர்.  ஒருவருக்கு 40 பேர்ச் (நான்கு பரப்பு) காணி வழங்கப்படுமாம். இருப்பினும், 40 பேர்ச்சுக்காக நாங்கள், இவ்விடத்தில் வந்திருக்க வேண்டியதில்லை. அப்படியென்றால், மூன்று வருடங்களுக்கு முன்னமே அதைப் பெற்றுக் கொண்டிருக்க முடியும்” என்று கூறுகின்றார்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்.

இது, வெறும் 30 வீட்டுத்திட்டத்துக்கான போராட்டமல்ல; முழுக் கனகர் கிராமத்துக்கான நில மீட்புப் போராட்டம் ஆகும். ஒட்டுமொத்தமாக 278 குடும்பங்கள் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இங்கியிருந்து இடம்பெயர்ந்திருந்தன.  இப்போது அக்குடும்பங்கள்,  இரண்டு, மூன்று மடங்காக அதிகரித்திருக்கின்றன.

“எங்களுக்கு மட்டும் காணி வீட்டைத்தந்து குடியேற்றுவது நியாயமா?” எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது.

1981ஆம் ஆண்டு,  அரச வர்த்தமானியில் 60ஆம் மைல் போஸ்ட் கிராமத்தை, கனகர் கிராமம் என, அன்றைய கால கட்டத்தில் இருந்த அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அக்கால வீடமைப்பு அமைச்சால், ஆரம்பகட்டமாக 30 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. இப்பிரதேசத்தில் தமிழ், சிங்களம் ஆகிய இரு இனங்களையும் சேர்ந்த மக்கள், விவசாயத்தை மேற்கொண்டு வந்திருந்தனர்.

1990ஆம் ஆண்டு யுத்த சூழ்நிலையால், திருக்கோவில்  பிரதேசத்துக்கு  இடம்பெயர்ந்து, அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு, தமது சொந்த இடமான ஊறணி – கனகர் கிராமத்துக்குத் திரும்பிய வேளை, இப்பிரதேசம் வனவிலங்கு இலாகாவுக்கு உட்பட்டும், இராணுவக் கட்டுப்பாட்டின் கீழும் காணப்பட்டிருந்தது.

பிரதேச செயலகம், வனவிலங்கு திணைக்களம், மாகாணசபை, பிரதமர் அலுவலகம் வரை இம்மக்கள் சென்றிருந்தும், இன்றுவரை மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை.

இந்தநிலையில், கனகர் கிராமத்து (60ஆம் மைல் போஸ்ற்) மக்கள், தமது காணிகளை வன இலாகா விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்ததிலிருந்து, இன்றுவரையில் பொத்துவில், திருக்கோவில், கல்முனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள், அம்மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இருந்தாலும், மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப சாத்தியமான தீர்வை வழங்குவதற்கு, எந்தத் தரப்பும் முயலவில்லைப் போலத்தான் தெரிகிறது.

இலங்கையில் 70களுக்குப் பின்னர், ஆரம்பமான இனமுரண்பாடுகள், 78களில் மோசமடைந்து 87இல் இந்திய இராணுவம் சமாதானப் படையாக வரவழைக்கப்பட்டு, அவர்களது காலத்தில் நடைபெற்ற பிரச்சினைகளால், மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது.

அதன் பின்னர், நாட்டில் நடைபெற்ற கோர யுத்தம், ஆயிரக்கணக்கான உயிர்ப்பலிகளின் பின்னர் நிறைவுக்கு வந்தது.

தற்போது யுத்தம் முடிவுற்று ஒன்பது வருடங்கள் கழிந்தும், தமிழ் மக்களின் ஆதரவுடன்  2015இல் நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, மீள்குடியேற்றம் என்பது, அரசாங்கத்தால் சுயமாக நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

இருந்தாலும், இழப்புகளைச் சந்தித்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றபோதிலும், அதைத் துரிதமாகச் செய்து முடிக்க முயலாவிட்டால், அதற்குக் காரணம் என்ன என்பதே இப்போதைய கேள்வியாகும்.

மக்கள், தமது சொந்தக் காணிகளுக்குள் செல்வதற்கு முடியாதவாறு,  வன பரிபாலனத் திணைக்களம் அச்சுறுத்தல் விடுத்து வருவது, கண்டிக்கத்தக்கதாகப் பார்க்கப்பட்டாலும், காணி உரிமைப் பத்திரம் இருந்தும் சொந்தக் காணிக்குள் சென்று பயிர்ச்செய்கை நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ள முடியாத நிலை குறித்து, கனகர் கிராம மக்கள் கவலையைத்தான் வெளியிடுகின்றனர்.

1990களில் இடம்பெயர்ந்த பின்னர், எந்தவித பாராமரிப்போ, கவனிப்போ இன்றியிருந்த கிராமம், காடாகி இருப்பதைக்கண்டு மனம் நொந்து கொள்வதைத் தவிர, இவர்களுக்கு வேறு வழியில்லை என்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றது.

வடக்கைப் பொறுத்தவரையில் மக்களின் காணிகளை இராணுவம், பாதுகாப்புத் தரப்பினர், தங்களது தேவைகளுக்காகப் பெருமளவில் சுவீகரித்தனர், பயன்படுத்துகின்றனர். கிழக்கின் கனகர் கிராமத்தின் கதை வேறாக இருக்கிறது.

“வீடுகள் அமைந்திருந்த பிரதேசங்களுக்குள், நுழைய முடியாதபடிக்கு காடு மண்டிப்போயிருக்கின்றது. சிரமத்தின் மத்தியில் உள்ளே சென்று பார்க்கின்ற போது, வீடுகள் உடைக்கப்பட்டு, கூரை ஓடுகள், மரம் தடிகள், கதவுகள், ஜன்னல்கள் இல்லாமல் உடைந்த சில சுவர்களைத்தான் காணமுடிகிறது. துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த அடையாளங்களுடன் ஒருசில சுவர்கள், அநேகமான வீடுகள் உடைந்து தரைமட்டமாகி இருக்கின்றன. காடுகளுக்குள் புகுந்து மரங்களை வெட்டித்தான், அவற்றையும் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.  ஒருசில வீடுகளின் அத்திபாரங்களை மாத்திரம்தான் காணமுடிகிறது” என்று கவலை கொள்ளும் மக்களுக்கு, ஆறுதல் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

கனகர் கிராமம் சமுளை மரங்கள் நிறைந்த சமுளஞ்சேனையாகத்தான் இருந்திருக்க வேண்டும். 1950-60 காலப் பகுதியில் காடுகள் வெட்டப்பட்டு, சேனைப்பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. அவ்வேளைகளில் குடியிருக்க ஆரம்பித்து, 1960-1990ஆம் ஆண்டு காலப்பகுதி வரை, சுமார் 278 குடும்பங்கள் வசித்து வந்தாகவும், ஒரு குடும்பத்துக்கு மூன்று தொடக்கம் ஐந்து ஏக்கர் வரையில் காணிகள் இருந்ததாகவும் கனகர் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

சமுளஞ்சேனையாக இருந்த இப்பிரதேசத்தில், 1981ஆம் காலப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அமைச்சருமான மறைந்த எம்.சி.கனகரெத்தினம், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக, வீடுகளை அமைக்கக்கூடிய வசதியுள்ள, அரச உத்தியோகத்தர்கள் அடங்கிய குடும்பங்களுக்கு, கடனடிப்படையில் 30 வீடுகள் வழங்கப்பட்டு, கனகர் கிராமம் என்றும் பெயர் சூட்டப்பட்டது.

இந்திய இராணுவத்தின் வருகையோடு, குண்டுவெடிப்புகள், படையெடுப்புகள் எனப் பிரச்சினைகள் அதிகரிக்க, இக்கிராமங்களில் இருந்த மக்கள், துன்பங்களை அனுபவிக்கத் தொடங்கினர். பின்னர், யுத்த அச்சம் காரணமாக, அவர்களுடைய காணிகள், வீடுகளில் இருந்து வெளியேறி, பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்தனர்.

தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் கைதுகள், கொலைகள், காணாமல் போதல்களால் இடம்பெயர்ந்து திருக்கோவில், கோமாரி, பொத்துவில் உட்பட்ட இடங்களிலுள்ள அகதி முகாம்களில் வசித்து, நெருக்கடிகள், பிரச்சினைகளால் உறவினர் வீடுகளிலும் வாடகை வீடுகளில் வசித்துவருகின்றனர். இவர்கள்   இலங்கையின் பல பாகங்களிலும் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், தாம் பூர்வீகமாக வாழ்ந்த கிராமத்தில் குடியேறுவதற்கென்றே முன்னெடுக்கும் போராட்டத்தை  30 வீட்டுத்திட்டத்துக்கான போராட்டமாகத் திசைமாற்றவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றனவோ என்ற சந்தேகமும் இந்த மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

ஆனால், முழுக் கனகர் கிராமமும் தங்களுக்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில், மக்கள் ஆணித்தரமாக உள்ளனர்.

நில மீட்புப் போராட்டமானது, அஹிம்சை வழியில் நடந்து கொண்டிருக்கின்றது. இதுவரையில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், கல்முனை விகாராதிபதி, கல்முனை மாநகரசபை உறுப்பினர், பொத்துவில் பிரதேசசபை தவிசாளர், உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் ஆகியோர் கனகர் கிராம நில மீட்புப் போராட்டக்காரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிச் சென்றிருக்கின்றனர்.

“இவர்கள் எமக்கான தீர்வைப் பெற்றுத் தருவதாக நம்பிக்கை தெரிவித்து சென்றுள்ளார்கள்; என்றாலும் எமது காணிகளை வழங்குவதற்கான உறுதிமொழிகளை ஜனாதிபதி, பிரதமர், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். ஆனாலும், எங்கள் அனைவரது குடும்பங்களுக்கும், கனகர் கிராமம் கிடைக்கும் வரையில், எமது நிலமீட்பு போராட்டம் தொடரும்”  என்று போராட்ட ஏற்பாட்டுக்குழுவின் செயலாளர்  எம். குழந்தைவேல் தெரிவிக்கிறார்.

கனகர் கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்தவர்கள், வயதானவர்களாகத் தங்களது காணிகளில் இறுதிக்காலத்திலேனும் வாழ்ந்து நிம்மதியடையவும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான  வாழ்கையை ஏற்படுத்திக் கொடுக்கவும் என, பல்வேறு எதிர்காலச் சிந்தனைகளுடன் முன்னே செல்ல எத்தனிக்கும் கனகர் கிராம மக்களின் காணிப்பிரச்சினைக்கு, விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே, எல்லோருடையதும் நோக்கமுமாக இருக்கிறது.

நில மீட்புப் போராட்டம் ஆரம்பித்ததையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது அலுவலகத்தில் சந்தித்த அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், “அதிகாரிகளுடன் கலந்துரையாடி, நல்லதொரு தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாக, ஜனாதிபதி உறுதியளித்தார்” என்று தகவல் வெளியிட்டார்.

போராட்டம் ஆரம்பமாகி, நான்காம் நாள் போராட்டக்காரர்களைச் சந்தித்த கோடீஸ்வரன், 10ஆம் நாள் ஜனாதிபதியைச் சந்தித்தார். இன்று 21ஆவது நாளாகிப் போயிருக்கிறது. இதுவரையில் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி ஏன்  நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுதான், மக்களிடமுள்ள கேள்வி.

இரவு பகலாக மக்களது போராட்டம் தொடரும் நிலையில், மக்களது கோரிக்கை ஜனாதிபதி, பிரதமர், வனவள அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு  செல்லப்பட்டிருக்கிறது. இருந்தாலும், முடிவுகளை அறிவிப்பதில்தான் ஏன் தாமதம்? இந்தத் தாமதம் இல்லாமல் போவதற்கு எதைத்தான் செய்ய முடியும்?

30 வருடங்களுக்கு முன்னர், சேனைப் பயிர்ச்செய்கை,  விவசாயத்தை மேற்கொண்டிருந்த 278 எண்ணிக்கையைத் தாண்டிய குடும்பத்தினர், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு யார் காரணம் என்று தெரிந்தாலும், காடு படர்ந்தால் அது வன இலாகாவுக்குச் சொந்தம் என்ற சாதாரண சட்டத்தின் கீழ் உள்ள காணியை மீட்பதற்கோ, அதை வழங்குவதற்கோ தாமதம் எதற்கு என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.

நாட்டில் நல்லிணக்கம், சமாதானம், இன நல்லுறவு ஏற்பட்டாக வேண்டுமாக இருந்தால், அது அரசியல் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டதாக, அடிமட்ட மக்களின் அத்தனை உரிமைகளும் நிறைவேற்றப்படுகின்ற வரைக்குமான செயற்பாடுகளுக்கான முன்னெடுப்புகள் நம் நாட்டுக்குத் தேவையானதாக இருக்கிறது.

தேடிக்கண்டுபிடித்து மீள்குடியேற்றங்களை நடத்தி வைக்க வேண்டிய அரசாங்கமும் அரச அதிகாரிகளும் மக்கள் போராட்டம் நடத்தும் போது கூட, அதற்கான தீர்வைக் கொடுக்கவில்லையென்றால், அதற்குள் இருக்கும் கேள்விகளுக்கு  பதில்களைக் கண்டறிய முடியாமல் உள்ளது.

வருடக்கணக்காகத் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் காணி மீட்புப் போராட்டம் போல், அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 60ஆம் மைல் போஸ்ட், கனகர் கிராமத்து மக்களின் போராட்டம் தொடரக்கூடாது என்பதே, எல்லோருடையதும் எண்ணமாக இருக்கவேண்டும்.

அதற்கான மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை, முயற்சிகளை நாமும் செய்வோமா?
“நாம் பூர்வீகமாக வாழ்ந்த காணியைத் தான் கேட்கிறோம்; எமது நிலத்தை எமக்கு வழங்கும் வரை நிலமீட்புப் போராட்டம் தொடரும்” என்று கூறியபடி  நடத்தும் நில மீட்புப் போராட்டம், இரவு பகலாகத் தொடர்ந்த வண்ணமிருக்கிறது.

-tamilmirror.lk

TAGS: