முல்லைத்தீவு மாங்குளம் பாலைப்பாணி பகுதியில் நேற்றுமுன்தினம் மிதிவெடிஅகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது நிலத்தில் மறைந்திருந்த வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவந்திருந்தார்.
இந்நிலையில் சிகிச்சைபலனின்றி குறித்த இளைஞர் நேற்று மாலை மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த நபர்கள் மிதி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது பற்றைப் பகுதியை துப்புரவாக்கிகொண்டிருந்த சமயம் டொங்கான் என்று அழைக்கபடும் வெடிபொருள் வெடித்து படுகாயமடைந்தனர். பின்னர் அருகில் இருந்த ஏனைய ஊழியர்கள் அவர்களை மீட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன் மற்றயவர் மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சம்பவத்தில் கிளிநொச்சி பகுதியைசேர்ந்த பத்மநாதன் திலீபன் என்ற இளைஞன் சம்பவதினமே மரணமடைந்ததுடன் வவுனியா பறநாட்டாங்கல்லை சேர்ந்த இராசேந்திரன் நிதர்சன் வயது 28 என்ற இளைஞனே சிகிச்சைபெற்று வந்தநிலையில் நேற்றையதினம் மரணமடைந்துள்ளார்.
குறித்த இளைஞர் திருமணம் முடித்து 8 மாதங்களாவதுடன் கணவனது மரணத்தை தாங்க முடியாது அவரது மனைவி நேற்றய தினம் நஞ்சருந்தியுள்ளார். நேற்றுகாலை தனது கணவனை வவுனியா வைத்தியசாலையில் வந்து பார்வையிட்ட சாரதா வயது 22 என்ற அவரது மனைவி கணவனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால் மனமுடைந்த நிலையில் நஞ்சருந்தியுள்ளார்.
பின்னர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. மாங்குளம் பாலைப்பாணி பகுதியில் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக DASH என்ற நிறுவனத்தால் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வருவதுடன் பல சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது. குறித்தசம்பவம் வவுனியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் சம்பவம்தொடர்பாக மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
-eelamnews.co.uk