ஏழு தமிழர்கள் தொடர்பில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலமைகள் உலகத் தமிழர்களுக்கே மகிழ்ச்சி அளிக்கின்றது. பேரரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழகத்தில் குற்றவாளிகளாக இந்திய நீதிமன்றத்தால் தீர்ப்பிடப்பட்டு சிறையில் உள்ளார்கள்.
ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பில் தமிழகத்தில் மாபெரும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றதுடன், இதற்காக செங்கொடி தன்னை ஆகுதியாக்கி அவர்களின் விடுதலையை வலியுறுத்தியிருந்தாள். இதனையடுத்து அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா இவர்களின் விடுதலையை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
இந்திய உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் தடையினால் ஏழு தமிழர்களின் விடுதலை தடைப்பட்டபடியிருந்தது. இந்த நிலையில் இவர்களை விடுதலை செய்வது குறித்து தமக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என்று சோனியா காந்தியும் ராகுல்காந்தியும் தெரிவித்திருந்திருந்தனர். இதனையடுத்து, ஏழு தமிழர் விடுதலையை தமிழக அரசிடம் கையளித்தது உச்சநீதிமன்றம்.
இதனையடுத்து, தமிழக அரசின் அமைச்சரவை கூடி தமிழக ஆளுநருக்கு ஏழு தமிழர் விடுதலைக்கான பரிந்துரை மனுவை அனுப்பியுள்ளது. தமிழகம் மாத்திரமின்றி, உலகத் தமிழர்களே ஏழு தமிழர் விடுதலைக்காக காத்திருக்கின்றனர். உண்மையில் இவர்களின் விடுதலை பல்வேறு அர்த்தங்களையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் ஒன்றாகும். கடந்த 27 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் உள்ளனர்.
இவர்களின் விடுதலைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் சிலரும் இருந்து வருகின்றனர். உண்மையில் அவர்கள் ராஜீவ்காந்தி கொலையுடன் தொடர்புடையவர்கள். இந்த அப்பாவிகள் பொய் வாக்குமூலம் பெறப்பட்டு, அரசியலுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள், காவல் அதிகாரிகள் பலர், பேரறிவாளனிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் பொய்யாக உருவாக்கப்பட்டவை என்று கூறியுள்ளனர்.
தமிழ் இனமே செய்யாத குற்றங்களுக்காக இவ்வாறு சிறையிருப்பது வாடிக்கையாகிவிட்டது. தமிழகத்தில் ஏழு தமிழரை்களைப் போல ஈழத்தில் எண்ணற்ற தமிழர்கள் சிறையில் உள்ளனர். முன்னாள் இந்தியப் பிரதமரை கொலை செய்ததாக கூறி அவர்களை சிறையில் வைத்துள்ள நிலையில், இங்கே காரணங்கள் ஏதுமின்றி ஈழ அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்.
பற்றி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் சிறையிடப்பட்டுள்ளார். ஈழத்தில் தண்ணீர் போத்தல் கொடுத்ததாக பலர் சிறையிடப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களின் விடுதலையை, சுதந்திரத்தை பறிக்கும் வகையில் – தமிழினத்தின் கரங்களை ஒடுக்கும் வகையில் ஈழத்தில் இலங்கைச் சிறைகளும் தமிழகத்தில் இந்தியச் சிறைகளும் பெரும்பசியுடன் உள்ளன.
தமிழகத்தில் ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அங்குள்ள தலைவர்பள் பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதுடன் தொடர்ந்தும் அவர்கள் விடுதலையை வலியுறுத்தி குரல் கொடுத்து வருகின்றனர். ஈழத்தில் உள்ள தலைவர்கள் சிறைய வைத்த சிங்கள அரசுடன் கொஞ்சி விளையாடி வருகின்றனர். அவர்களின் விடுதலை பற்றி அவர்களிடம் எந்த நினைவும் கடமையும் இல்லை.
எவ்வாறெனினும், ஏழு தமிழர் விடுதலை விரைவில் சாத்தியமாக வேண்டும். அற்புதம் அம்மாள் முதலியோரின் கண்ணீருக்கும் போராட்டத்திற்கும் முடிவு கிடைக்க வேண்டும். அந்த விடுதலை ஈழத் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். இதனை முன்னுதாரணமாக கொண்டு, இங்குள்ள தமிழ் தலைவர்கள், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி குரல் கொடுத்து போராட்டங்களில் ஈடுபடவேண்டும்.
தமது சொகுது துறந்து ஈழத் தமிழர்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் ஈழ அரசியல் தலைவர்கள் செயலாற்ற வேண்டும். செய் அல்லது செத்து மடி என்ற தேசியத் தலைவரின் சிந்தனையை பின்பற்ற வேண்டும் இங்குள்ள அரசியல்வாதிகள். இல்லாவிட்டால் அமிர்தலிங்கங்களாக இவர்கள் மாறுவார்கள். அந்த முடிவுகளே இவர்களுக்கு எழுதப்படும்.
-http://eelamnews.co.uk