இலங்கை மாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை அமைப்பதற்கு ஓர் ஏக்கர் பரப்புள்ள காணியை கிழக்கு மாகாண காணி ஆணையாளர் ஒதுக்கியுள்ளதற்கு அப்பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாயக்கல்லி மலையில், 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி, பௌத்த தேரர்கள் தலைமையில் பலாத்காரமாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டது.
முஸ்லிம்களும் தமிழர்களும் மட்டுமே வாழும் இப் பிரதேசத்தில், பௌத்தர்கள் எவருமற்ற இடத்தில், மேற்படி புத்தர் சிலை வைத்தமை குறித்து, அங்கு வாழும் மக்கள் கடந்த இரண்டு வருடங்களாக தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அச்சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் பௌத்த விகாரை ஒன்றினை அமைப்பதற்காக, ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த காணியின் எல்லைகள் காட்டப்பட்டு, அதனை இறக்காமம் பிரதேச செயலாளர் முறையாக ஒப்படைப்பார் எனவும், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.டி.. அனுர தர்மதாஸ எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
- பிரேசில்: அதிபர் தேர்தலில் எதிர்பாராத திருப்பம் – போட்டியிலிருந்து லூலா விலகல்
- சாலை இல்லாததால் மலையில் நிகழ்ந்த பிரசவம் – தொப்புள் கொடியை அறுக்க கல்
அம்பாறை திகாமடுல்ல ஸ்ரீவித்தியானந்த மஹா பௌத்த அறப்பளியின் தலைவர், கிரிந்தவெல சோமரத்ன தேரருக்கு, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் எழுதியுள்ள கடிதத்திலேயே இது குறித்து அறிவித்துள்ளார். அக்கடிதத்தின் பிரதி, இறக்காமம் பிரதேச செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அறிவித்துள்ளபடி, விகாரை அமைக்கும் பொருட்டு மாயக்கல்லி மலைப் பகுதியில் காணி வழங்கக் கூடாது எனத் தெரிவித்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எனும் அரசியல் கட்சியின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் கே.எல். சமீம் என்பவர், இறக்காமம் பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலமான ஆட்சேபனை மனுவொன்றினை வழங்கினார்.
அதேபோன்று, அப்பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ்.எல். பாறூக் என்பவரும், இது தொடர்பில் ஆட்சேபனை மனுவொன்றினை சமர்ப்பித்தார். இன்னும் சிலரும் காணி வழங்குவதற்கு எதிராக, இவ்வாறு எழுத்து மூலம் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை, இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது, இக் கூட்டத்தில், மாயக்கல்லி மலைப் பகுதியில் விகாரை அமைப்பதற்காக காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென காணி ஆணையாளர் அறிவித்துள்ளமை குறித்தும், அது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
- இலங்கை: சிறுநீரகத்தை விற்று கடனை செலுத்த முயலும் பெண்கள்
- ராஜலட்சுமி நந்தகுமார் – கடல் கடந்து அமெரிக்காவில் சாதித்த தமிழ்ப் பெண்
இறுதியாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் பேசி, தீர்க்கமானதொரு முடிவினைப் பெற்றுக் கொள்ளும் வரையில், மாயக்கல்லி மலைப் பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி வழங்குவதில்லை என்று, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படுமானால், எதிர்காலத்தில் அங்கு சிங்கள குடியேற்றம் உருவாக்கப்படலாம் என, அப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றனர்.
“விகாரை அமைக்கக் கோரும் பகுதியின் 10 கிலோமீற்றர் தூரம் வரை, ஒரு பௌத்த குடும்பம் கூட இல்லாத சூழலில், அங்கு விகாரை அமையுமானால், எதிர்காலத்தில் ஓர் இனத்துக்கான திட்டமிட்ட குடியேற்றங்கள் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது” என்று, விகாரை நிர்மாணத்தின் பொருட்டு காணி வழங்குவதற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சேபணை மனுவில், சட்டத்தரணி பாறூக் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil