ராஜபக்ச ஆட்சியேற்றால் – தமிழீழம் மலரும்!

இந்தியா சென்றுள்ள ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2020ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தான் அல்லது தனது சகோதரர்களில் ஒருவர் ஆட்சியாளருக்கான தேர்தலில் களம் இறக்கப்படுவார் என்றும் தமது கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா அரசு வளர்த்தெடுக்கும் சிங்களப் பேரினவாதம், ராஜபக்சவை மீண்டும் ஆட்சிக் கதிரையில் இருத்தினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

ஏற்கனவே கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதிக் கனவில் இருக்கிறார். பசில் ராஜபக்சவுக்கும் அந்தக் கனவு இருக்கிறது. ராஜபக்சவும் நாமலும் போட்டியிட முடியாத வகையில் அரசியல் அமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் இவர்கள் இருவரில் ஒருவர் ஆட்சியை கைப்பற்றலாம் என திட்டமிடுகின்றனர். அண்மையில் எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துக் கூறிய ராஜபக்சவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச, தான் அல்லது கோத்தாவோ, பசிலோ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார்.

இந்தியா சென்றுள்ள ராஜபக்சவை இவர்தான் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி என சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றுள்ளார். அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் ராஜபக்சவை சந்தித்துள்ளார். இந்தியாவின் ஆதரவையும் ஆசீர்வாத்தையும் பெற்றுக் கொள்ளவே சுப்பிரமணியன் சுவாமி ராஜபக்சவை அழைத்திருப்பதாக இந்திய தரப்பில் சொல்லப்படுகிறது. தற்போதைய சிறிசேன அரசாங்கம் அமெரிக்க – மேற்குலக சார்புடன் பயணிப்பதன் காரணமாக இலங்கையை சூழவுள்ள நாடுகளின், குறிப்பாக இந்தியாவின் ஆதரவை பெற ராஜபக்ச தரப்பு முனைகின்றது.

இந்தியாவில் கருத்துக்கூறிய ராஜபக்ச தாம் ஆட்சியை கைப்பற்றியவுடன் இந்தியவுடன் மூவரணி ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார். மூவரணி உப்பந்தம் என்பது விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக இந்திய- இலங்கை இராணுவத் தரப்பு செய்து கொண்ட ஒப்பந்தம் ஆகும். அத்துடன் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பயன்படுத்திய வியூகங்களை ஸ்ரீலங்கா அரசு பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ராஜபக்ச சொல்லியுள்ளார். ராஜபக்ச ஆட்சியை கைப்பற்றினால் தமிழ் ஈழம் இருண்ட யுகத்திற்கு மீண்டும் தள்ளப்படும் என்பதே இதன் அர்த்தம்.

ராஜபக்ச, தமிழ் இனம்மீது நடாத்திய கோரமான முள்ளிவாய்க்கால் படுகொலையை ஈழத் தமிழர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இன்றும் அதன் பாதிப்புக்களை ஈழத் தமிழ் இனம் சுமந்து வருகிறது. ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்ட்டதுடன் ஒரு பகுதி மக்களின் வாழ்வியல் பொருளாதார கட்டமைப்பே முற்று முழதாக சூறையாடப்பட்டது. மக்கள் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டார்கள். அதற்கான நீதியை ராஜபக்சவும் சரி, இன்றைய அரசும் சரி, சர்வதேச சமூகமும் சரி, இனப்படுகொலைக்கான நீதியை வழங்காமல் இந்த விடயத்தை வைத்து தம் அரசியலையும் செய்கின்றனர்.

புலி அழிப்பு வியூகம் என்பது எஞ்சிய ஈழத் தமிழ் மக்களையும் ராஜபக்ச அழிக்க முனையும் விடயமாகவே கருத வேண்டியது. ராஜபக்சவின் ஆட்சி எத்தகைய காட்டு மிராண்டி தனமான கடூரமான ஆட்சி என்பதை விளக்கத் தேவையில்லை. மனித உரிமையாளர்களும், ஊடகவியலாளர்களும் எழுத்தாளர்களும், மக்களும் எவ்வாறு அழிக்கப்பட்டால்கள் என்பதை உலகமே அறியும். அந்த ஆட்சி நிலையை உருவாக்கி தமிழ் ஈழத்தையும் மக்களையும் ஒடுக்குவதே ராஜபக்சவின் முழுமையான இலக்காக இருக்கும். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் புலிகள் என்று சொல்லிய ராஜபக்ச அனைத்து தமிழர்களையும் புலிகள் என இனி வரும் காலத்தில் காணாமல் ஆக்கினால் யார் கேட்பது?

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டபோது, தான் தமிழீழ தேசத்தால் தோற்கடிக்கப்பட்டாக கூறினார். அந்த மக்களை பழி வாங்கவும் பலி வாங்கவும் ராஜபக்ச தயாராகிறார். 2020 ஈழத் தமிழர்களு்ககு மிகுந்த போராட்டம் மிகுந்த ஆண்டாக இருக்கும். இன்றைய அரசு தமிழர் பிரச்சினைக்கு உரிய – உரிமைத் தீர்வு எதனையும் தருவதாக தெரியவில்லை. சிங்களப் பேரினவாத கொள்கைகளை நன்றாக பாதுகாத்து ராஜபக்சவிடம் கையளிப்பார்கள் போலவே தென்படுகிறது. எனவே ராஜபக்சவின் இன அழிப்பு யுத்தத்தை எதிர்கொள்ள- மீண்டும் முள்ளிவாய்க்காலை எதிர்கொள்ள ஈழத் தமிழர்கள் தயாராக வேண்டியுள்ளது.

ஆனால், இந்த யுத்தத்தை வெற்றி யுத்தமாக ஈழத் தமிழர்கள் பயன்படுத்த முடியும். இன்றைய மைத்திரியின் நிழல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து ராஜபக்சவின் வெளிப்படை யுத்தத்தை ஈழத் தமிழர்கள் புத்திசாதுரியமாக எதிர்கொள்ள முடியும். ராஜபக்வின் கொடுமைகள் மீண்டும் தனி ஈழத்தை வலுவாக வலியுறுத்தும். ராஜபக்சவின் அராஜகங்களும் சிங்களப் பேரினவாத நிரந்தர அராஜகங்களும் ஈழத்தை வலியுறுத்தும். ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது தமிழீழத்தை மலரச் செய்யும். தமிழீழமே தீர்வு என்ற முடிவுக்கு ஈழத் தமிழர்கள் மாத்திரமல்ல, உலகமும் நகரும்.

ராஜபக்சவின் கொடும் போரில் நாம் முற்றாக அழிய முடியாது. இந்த மண்ணையும் எதிர்கால தலைமுறைகளையும் பாதுகாக்க தனி ஈழத்தை நிறுவ வேண்டும். ஆயிரம் ஆயிரம் போராளிகள் எந்த கனவுக்காக தம்மை மாய்த்தார்களோ அந்தக் கனவை நிலை பெற செய்ய வேண்டும். மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று உயிர் நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் காலத்தில் இதற்கான உறுதியை ஒவ்வொரு ஈழத் தமிழரும் எடுத்துக் கொள்வோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று.

-eelamnews.co.uk

TAGS: