போர்க்குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்குமாறு ஐ.நாவைக் கோருவேன் – சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை நீக்குமாறு ஐ.நாவிடம் கோரப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடக ஆசிரியர்கள், பிரதானிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் 73 ஆவது கூட்டத் தொடரில், பொது விவாதத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 25ஆம் நாள் உரையாற்றவுள்ளார்.

சிறிலங்கா படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை அகற்றுவதற்கு  தாம் இந்த உரையைப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாக, சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

”ஐ.நாவில் நான் சிறப்பு கோரிக்கையை முன்வைக்கவுள்ளேன். போர்க்குற்றங்கள் தொடர்பான, இந்தப் பிரச்சினையை தீர்க்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடமும் எழுத்து மூலம் கோரவுள்ளேன்.

இந்தக் குற்றச்சாட்டுகளை நீக்குமாறும், இந்தச் சிக்கல்களைத் தீர்க்க ஒரு சலுகையை வழங்குமாறும்  அவர்களிடம் கேட்கவுள்ளேன்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் போது, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் ஆகியோரையும் சந்தித்து இதுபற்றிய கோரிக்கைகளை விடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

-BBC_Tamil

TAGS: