சிறிலங்காவை ஒரு பௌத்த நாடாக ஏற்றுக் கொள்வதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், இரா.சம்பந்தன் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன் உள்ளிட்டவர்களைக் கொண்ட இந்தக் குழுவினர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.
இதன் பின்னர், டெக்கான் குரோனிக்கல் நாளிதழ், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிடம் செவ்வி கண்டுள்ளது.
இந்தச் செவ்வியில் அவரிடம், உங்களின் பிரதிநிதி இரா.சம்பந்தன், முற்றிலுமாக தமிழரின் நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளார் என்றும், இந்தியப் பிரதமர் மோடியிடம் அவர், தமிழர்கள் சிறிலங்காவை ஒரு பௌத்த அரசாக ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார் எனவும் எமது புதுடெல்லி வட்டாரங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது, அதுபற்றிய உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு டக்ளஸ் தேவானந்தா அளித்துள்ள பதிலில்,
“முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இரா.சம்பந்தன் ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் தலைவர் அல்ல. அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக மாத்திரம் இருக்கிறார்.
ஈபிடிபி சார்பில் நானும், தமிழ் முற்போக்கு முன்னணியின் சார்பில் மனோ கணேசனும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீமும் இந்தக் குழுவில் வந்திருக்கிறோம்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த போது, சிறிலங்காவை பௌத்த நாடாக அங்கீகரிப்பதாக இரா.சம்பந்தன் கூறினார். இந்தக் கருத்து, துரதிஷ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் நிலைப்பாடு அதுவல்ல.
சிறிலங்கா ஒரு மதச்சார்பற்ற நாடு. அனைவருக்கு சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-puthinappalakai.net