அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்: 20,000 கோடி மதிப்புள்ள சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரி

20,000 கோடி டாலர் மதிப்புள்ள சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரிகளை விதித்துள்ளது அமெரிக்கா. இதன் மூலம் அமெரிக்கா-சீனா இடையே நடந்துகொண்டிருக்கும் வணிகப் போரை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

6,000 பொருள்கள் மீது இந்த கூடுதல் இறக்குமதி வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே இது நடந்துகொண்டிருக்கும் அமெரிக்க-சீன வணிகப் போரில் மிகப் பெரிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

கைப்பைகள், அரிசி, துணிகள் போன்றவை கூடுதல் வரிவிதிப்புக்கு இலக்காகியுள்ளன. ஆனால், கூடுதல் வரிவிதிப்புக்கு உள்ளாகும் என்று நம்பப்பட்ட, ஸ்மார்ட் வாட்ச் போன்ற சில பொருள்கள் கூடுதல் வரியில் இருந்து தப்பியுள்ளன.

அமெரிக்கா மேற்கொண்டு இது போன்ற வரிவிதிப்பில் ஈடுபட்டால் தாமும் பதில் நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக முன்னதாக கூறியிருந்தது சீனா.

இந்த புதிய வரிவிதிப்பு செப்டம்பர் 24 முதல் அமலுக்கு வரும். தற்போது இது 10 சதவீதம் என்ற அளவில் இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏதும் எட்டப்படாவிட்டால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது 25 சதவீதமாகும்.

“மானியங்கள் அளிப்பது, சில குறிப்பிட்ட துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூர் கூட்டாளிகளோடு மட்டுமே செயல்பட முடியும் என்ற விதி போன்ற முறையற்ற வணிக நடைமுறைகளில் சீனா ஈடுபடுவதற்கு” பதிலடியாகவே இந்த புதிய வரிகள் விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

“எவ்விதமான மாற்றங்களை செய்யவேண்டும் என்பது குறித்து நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம். எங்களை முறையாக நடத்துவதற்கான எல்லா வாய்ப்புகளையும் சீனாவுக்கு வழங்குகிறோம். ஆனால், இதுவரை தமது நடைமுறைகளை மாற்றிக்கொள்ள சீனா விரும்பவில்லை,” என்று தெரிவித்துள்ளார் டிரம்ப்.

பதிலடி கொடுத்தால்…

“இந்த நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்தால், உடனடியாக அமெரிக்கா மூன்றாம் கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும். அதன் மூலம் மேலும், 2,670 கோடி டாலர் மதிப்புள்ள சீனப் பொருள்கள் மீது மேலதிக வரிவிதிக்கப்படும்,” என்றும் கூறியுள்ளார் டிரம்ப்.

கொடிகள்

அப்படி மேலும் 26,700 கோடி டாலர் மதிப்புள்ள சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரிவிதித்தால் சீனாவின் அமெரிக்க ஏற்றுமதி மொத்தமுமே வரிவிதிப்புக்கு உள்ளாவதாகும்.

இந்த ஆண்டு ஏற்கெனவே இரண்டு முறை சீனப் பொருள்கள் மீது புதிய வரிகளை விதித்துள்ளது அமெரிக்கா. கடந்த ஜூலை மாதம் 3400 கோடி டாலர் மதிப்புள்ள சீனப் பொருள்கள் மீது வரிகளை அதிகரித்த அமெரிக்கா, மீண்டும் கடந்த மாதம் 1,600 கோடி டாலர் மதிப்புள்ள சீனப் பொருள்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தது.

கடந்த சுற்றுகளைப் போல அல்லாமல் தற்போதைய சுற்று வரிவிதிப்புக்கு உள்ளான பொருள்களின் மதிப்பும் பல மடங்கு அதிகம். அதுமட்டுமில்லாமல் தற்போதுதான் பைகள், அறைகலன்கள் போன்ற நுகர்வுப் பொருள்கள் வரிவிதிப்புக்கு இலக்காகியுள்ளன.

இதனால், விலை உயர்வின் வலியை அமெரிக்கக் குடும்பங்கள் உணரத் தொடங்கும். இந்த நடவடிக்கையால் தங்கள் செலவு கூடும் என்றும், வேலைவாய்ப்புகள் குறையும் என்றும் அமெரிக்க நிறுவனங்கள் கூறியுள்ளன. -BBC_Tamil