அனுராதபுரத்தை தொடர்ந்து கொழும்பு சிறைச்சாலையிலும் தமிழ் கைதிகள் உண்ணாவிரதம்

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று (புதன்கிழமை) ஒருநாள் அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு அனுராதபுரத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர், கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (புதன்கிழமை) 6ஆவது நாளாக தொடர்கிறது. தமக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்து, சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளுக்கும், அனுராதபுரம் சிறைக்கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கொழும்பிலுள்ள மெகசின் சிறைக்கைதிகள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நடத்துவதாக கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.

இதுகுறித்து பி.பி.சி. தமிழிடம் விவரித்த அருட்தந்தை சக்திவேல்,”கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 60க்கும் மேற்பட்டோர் இன்று ஒருநாள் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று முன்னெடுக்கப்படும் அடையாள போராட்டம் மஞ்சள் எச்சரிக்கையாகும். இது சிவப்பாக மாறிவிடக்கூடாது. இது பச்சையாக மாற வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் இனிமேலும் ஏமாற்றப்படக்கூடாது. அவர்கள் மீதான சட்டநடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறுதான் நாம் கோருகிறோம்.” என்றார்.

அருட்தந்தை சக்திவேல்
அருட்தந்தை சக்திவேல்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளதா என்று அருட்தந்தை சக்திவேலிடம் கேட்டோம்.

”2015ஆம் ஆண்டில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகளுக்கு வாக்குகள் பலவற்றை வழங்கியுள்ளது. அவற்றை நிறைவேற்ற வேண்டிய காலகட்டத்திற்குள் கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது இணக்க அரசியலை செய்துவருகிறது. அடுத்த வருடம் முழுவதும் தேர்தல் காலம். அதனால் அனைத்துக் கட்சிகளும் தேர்தலை மையப்படுத்தியே காய்களை நகர்த்தும். அப்போது இணக்க அரசியலை முன்னிலைப்படுத்தாது, கட்சி அரசியலே முன்னிலைப்படுத்தப்படும்” என்று அவர் கூறினார்.

”எனவே, தற்போது தான் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தீர்க்கமான முடிவு எடுக்க சிறந்த சந்தர்ப்பம் இருக்கிறது. தமிழ், சிங்கள மக்களுக்கிடையிலான நல்லிணக்கத்தின் அடையாளமாக தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அரசாங்கம் துரிதமாக இதனைக் கையாள வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார்அருட்தந்தை சக்திவேல்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அனுராதபுரத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர். -BBC_Tamil

TAGS: