“இலங்கையின் வட பகுதியை ராணுவ கண்காணிப்பில்தான் வைத்திருப்போம்” – தளபதி பேச்சு

“விடுதலைப் புலிகள் தோன்றிய இலங்கையின் வடக்கு பிரதேசத்தை எப்போதும் நாங்கள் எங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருப்போம்,” என்று இலங்கை ராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தனிநாடுக் கோரிக்கையை முன்வைத்து போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை ராணுவத்தினர் அழித்திருந்தாலும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் தனிநாடுதான் வேண்டுமென்று கோரி வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடகங்களை ராணுவத்தின் பலாலி கட்டளைத் தலைமையத்திற்கு இன்று வியாழக்கிழமை அழைத்துப் பேசிய ராணுவத் தளபதி தேசிய பாதுகாப்பு மற்றும் சிவில் நிர்வாகம் குறித்தும் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

வடக்கு மகாணத்தில் படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவிப்பதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், மீளவும் புலிகள் அமைப்பு தோன்றி வருவதாகவும் தெற்கிலுள்ளவர்கள் கருத்துக்களை வெளியிடுகின்ற போதிலும் தேசிய பாதுகாப்பிற்கு வடக்கில் அச்சுறுத்தல் இல்லை என்று அவர் கூறுகிறார்.

வடக்கு மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் படையினரிடமிருந்த பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் 2880.08 ஏக்கர் காணி மட்டுமே படையினரிடம் உள்ளது.

அதாவது நூற்றுக்கு ஒரு வீதமான நிலப்பரப்புதான் படையினர் வசமுள்ளது. இதில் 500 ஏக்கரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை ராணுவத்தின் யாழ் மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி

இதனால் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை. தேசிய பாதுகாப்பை உறுதி செய்த பின்னர்தான் படையினர் காணிகளை விடுவிக்கின்றனர். இதனிடையில் புலிகள் அமைப்பு மீண்டும் தோன்றி விடும் என்பதை ஏற்றுக்கொள்வதற்கில்லை. ஆனால் தனிநாடு கோரிய போராட்டத்தை புலிகள் வடக்கிலிருந்தே ஆரம்பித்தார்கள்.

ஆனால் இன்றைக்கு அவர்கள் அழிக்கப்பட்டிருந்தாலும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அந்த தனிநாட்டுக் கோரிக்கையையே முன்வைத்து வருகின்றனர்.

அதனால் வடக்கு பகுதியை ராணுத்தின் கண்காணிப்பிலேயே வைத்திருக்கிறோம். ஜே.வி.பி அமைப்பினர் இந்த நாட்டில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிவில் நிர்வாகத்தில் ராணுவம் தலையிடுவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணுவம் உதவிகளையே செய்து வருவதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதில் ராணுவத்தினருக்கு எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை. ஆனாலும் ராணுவம் மக்களுக்கு உதவிகள் செய்து வருவதை யார் சொல்லியும் நாங்கள் நிறுத்தப் போவதில்லை;. தொடர்ந்தும் அதிக உதவிகளையே ராணுவம் மக்களுக்கு வழங்கி வரும் என்று மேஐர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி கூறியுள்ளார். -BBC_Tamil

TAGS: