இரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் கசிப்பு தயாரிப்பிற்கு எதிராக போராடிவந்த தமிழ் இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த படுகொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ள போதிலும் இந்த சம்பவத்தால் இரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் பெரும் பதற்றமான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஏராளமான பொலிசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது இரத்தினபுரி செய்தியாளர் தெரிவித்தார்.
இரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒருவர் கள்ளச் சாராயம் வடித்து அந்தப் பகுதியில் உள்ள தோட்டங்களைச் சேர்ந்த தமிழ் தொழிலாளர்களுக்கு விநியோகித்து வந்துள்ளார்.
இதனால் தோட்டங்களில் தொழில்புரியும் தமிழர்களின் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து, கள்ளச் சாராயம் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு எதிராக 37 வயதான தனபால் விஜேரத்னம் என்ற இளைஞர் தொடர்ச்சியாக போராட்டங்களை ஒழுங்கு செய்து நடத்தி வந்துள்ளார்.
அதேவேளை தோட்டங்களில் வாழும் மக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் இரத்தினபுரி பாமன்கட முச்சக்ர வண்டி தரிப்பிடத்தில் இருந்த தனபால் என்ற இளைஞரை கடத்திச் சென்றுள்ள அடையாளம் தெரியாத நபர்கள் அவரை படுகொலை செய்துள்ளனர்.
அவருடன் மற்றுமொரு இளைஞரையும் குறித்த குழுவினர் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிவரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரின் குடும்பத்தினரே இந்த கொலையை மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், குறித்த நபரின் வர்த்தக நிலையத்திற்கும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் இரத்தினபுரி பாமன்கார்டன் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதுடன் அதிகளவான பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சிறிபால என்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரின் பிள்ளைகளே தனது மகனை கொலை செய்தாக அவரது தந்தை எஸ். தனபால் தெரிவித்தார்.
இந்நிலையில் இளைஞரின் கொலையுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யுமாறு அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முற்பட்ட நிலையில் பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இவ்வாறான சூழலில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரின் இரு பிள்ளைகளை இரத்தினபுரி பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடத்தப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட 37 வயதான தனபால் விஜேரத்னம் என்ற இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
-athirvu.in