மகிந்தவிடம் பிரபாகரன் பணம் பெற்றுக்கொண்டது உண்மை! டக்ளஸ் தேவானந்தா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் பணம் பெற்றுக்கொண்டு தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவைத் தோல்வியடைய செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகியிருந்தால் பிரபாகரன் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார். தமிழக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் கணிசமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில காணிகள் விடுவிக்க வேண்டியுள்ளது. யுத்தம் முடிவுக்கொண்டு வரப்பட்ட பின்னர் இன்று வடக்கு கிழக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

நாட்டில் இன்று மக்கள் அமைதியாக வாழ்கின்றார்கள். நாட்டில் யுத்தம் ஒன்று நடந்ததா என்று சிந்திக்கும் வகையில் அந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பார்த்தார்.

அது அவரின் தவறான கணிப்பு. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரபாகரன் மக்களை அச்சுறுத்தினார்.

ரணில் ஜனாதிபதியாக வந்திருந்தால் இன்று பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார். பிரபாகரன் மகிந்தவிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டமை வெளிப்படையான உண்மை. அது முழு நாட்டிற்கும் தெரியும்.

நான் அரசாங்கத்தில் இருந்தவன். எனக்கு நடந்தவை அனைத்தும் தெரியும். பணத்தை பெற்றுக்கொண்டு போன எமில்காந்தன் கூட இன்று வெளிநாட்டில் உயிருடன் இருக்கின்றார்.

இலங்கைக்கு வந்தால் அந்த கொடுக்கல் வாங்களில் ஈடுபட்ட தரப்பினர்களை சந்திக்க வைக்க முடியும் என நேர்காணலில் ஈடுபட்ட ஊடகவியலாளரிடம் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-eelamnews.co.uk

TAGS: