தியாக தீபத்தின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளை நடத்த தடை!

தியாகி திலீபன் நினைவேந்தல் காலத்தில், யாழ்ப்பாணம் மாநகர சபை நியாயாதிக்க எல்லையினுள் வேறெந்த நிகழ்வையும் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று, யாழ்ப்பாணம் மாநகர சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில், நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவது தொடர்பில், மாநகர சபை உறுப்பினர்களுக்கான ஒழுங்குபடுத்தல் கூட்டம், இன்று காலை யாழ். மாநகர சபையில் நடைபெற்றது.

இதன்போது உறுப்பினர் ஒருவரால், “தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை ஒழுங்குபடுத்தும் அதேவேளை, மாநகர சபை எல்லையினுள் நிகழ்வொன்றை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று வேண்டுகோள்விடுத்தார்.

இந்த வேண்டுகோளை அடுத்து, இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களின் நிறைவில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள தேசிய சுற்றுலா தின நிகழ்வுக்காக யாழ். மாநகர சபை மைதானத்தை வழங்குவதில்லை என்று கலந்துகொண்ட உறுப்பினர்கள் ஏக மனதாகத் தீர்மானித்ததுடன், உறுப்பினர்களின் தீர்மானம் பற்றி வட மாகாண சுற்றுலாத் துறை செயலணியின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

-eelamnews.co.uk

TAGS: