வாழ்வாதார உரிமைக்கான போராட்டம்: தலவாக்கலை நகர் ஸ்தம்பித்தது

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமைக்காக, தமிழ் முற்போக்குக் கூட்டணி, தலவாக்கலை நகரில் நேற்று (23) நடத்திய ஆர்ப்பாட்டத்தால், நகரின் நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பித்தன.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்துகொள்ளப்படும் கூட்டொப்பந்தம், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், இம்முறையாவது நியாயமான சம்பளத்தை வழங்குவதற்கு, பெருந்தோட்டக் கம்பனிகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியும், கூட்டொப்பந்தம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று கோரியும், கூட்டணியின் ஏற்பாட்டில், தலவாக்கலை நகரில், மாபெரும் ஆர்ப்பாட்டமும் பேரணியும் இடம்பெற்றன.

ஆர்ப்பாட்டத்தில் அணிதிரண்ட மக்கள், நியாயமான சம்பள உயர்வு கோரிய கோஷங்களை எழுப்பிய வண்ணம், பதாதைகளை ஏந்தியவாறு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர் ப.திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், எம்.திலகராஜ், வேலு குமார் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், தோட்டத் தொழிலாளர்கள், மலையகத்தை மய்யமாகக் கொண்டு இயங்கிவரும் ஏனைய தொழிற்சங்கங்களின் பிரதிநிதகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சுமார் 5,000 பேர் பங்கேற்பு

ஆர்ப்பாட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில், நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். சுமார் 5,000 பேர், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
ஆர்ப்பாட்டப் பேரிணியில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்த போதிலும், மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சொற்பளவிலான மக்களே பங்கேற்றனர் என்று தெரியவருகிறது. பேரணியின் முடிவில், பெரும்பாலானோர் வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

சங்கு ஊதி ஆரம்பிக்கப்பட்ட பேரணி

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், பேரணியிலும் ஈடுபட்டிருந்தனர். பேரணியானது, தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதி, தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயதுக்கு அருகில் இருந்து ஆரம்பமாகி, தலவாக்கலை – கொத்மலை வீதியின் ஊடாக, தலவாக்கலை நகரசபை மைதானம் வரை சென்றடைந்தது. சங்கு ஊதப்பட்டும், தப்பு இசைக்கருவி இசைக்கப்பட்டுமே, பேரணி ஆரம்பிக்கப்பட்டது..

போக்குவரத்து ஸ்தம்பிதம்

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக, தலவாக்கலைக்கான போக்குவரத்து, ஒரு மணித்தியாலம்வரை ஸ்தம்பித்திருந்தது. பேரணி மைதானத்தைச் சென்றடைந்ததன் பின்னர், போக்குவரத்தும் வழமைக்குத் திரும்பியுள்ளது.

20 பஸ்களில் தொழிலாளர் வந்தனர்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட பல பகுதிகளிலிருந்து, தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டனர். இவர்களை அழைத்து வருவதற்காக, 20க்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன எனத் தெரியவருகிறது.

லொறியில் மேடைப் பேச்சு

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றுவதற்காக, மேடை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை. லொறியொன்றில் ஏறியே, மக்கள் பிரதிநிதிகள் தமது கருத்துகளைத் தெரிவித்தனர்.

கடையடைத்து வலுச்சேர்ப்பு

பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தலவாக்கலை நகரவாசிகள், தங்களது வியாபார நிலையங்களை மூடி, ஆதரவை வழங்கினர்.

பல தொழிற்சங்கங்கள் கைகோர்ப்பு

தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மலைகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்களும், தமது ஆதரவை வழங்கியிருந்தன.

-tamilmirror.lk

TAGS: