இரானில் ராணுவ அணிவகுப்பில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள, இரான் ‘தன்னை தானே முகக்கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என ஐ.நாவுக்கான அமெரிக்கத்தூதர் வலியுறுத்தியுள்ளார்.
இரான் அதிபர் ஹசன் ருஹானி, ‘தன் நாட்டு மக்களை நீண்ட காலம் ஒடுக்கி வைத்துள்ளதாக’ தூதர் நிக்கி ஹேலி தெரிவித்தார்.
அஹ்வாசில் ராணுவ அணிவகுப்பின் போது நடைபெற்ற தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு பெற்ற நாடுகள்தான் காரணம் என அதிபர் ஹசன் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நிக்கி ஹேலி இவ்வாறு கூறியுள்ளார்.
நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இரண்டு பிரிவினைவாத அமைப்புகள் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அதற்கான ஆதாரத்தை அவர்கள் வழங்கவில்லை.
இரானில் தென் மேற்கு நகரமான அஹ்வஸில் ராணுவ அணிவகுப்பின் போது நான்கு துப்பாக்கிதாரிகள் சுட்டதில், பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 25 பேர் கொல்லப்பட்டனர். இதில் நான்கு வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்தார்.
யார் யாரை குற்றஞ்சாட்டுகின்றனர்?
அஹ்வஸ் தேசிய எதிர்ப்பு மற்றும் ஐ.எஸ் அமைப்பு ஆகிய இரு அமைப்புகளும் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் ஐ.எஸ் குழுவின் செய்தி முகமை, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்லாமிய புரட்சி காவலர் படை சீருடையில் மூன்று நபர்கள் காரில் வந்து, அணிவகுப்பை நோக்கி சென்றனர்.
அந்த நபர்கள் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும், ஜிகாத் குறித்த முக்கியத்துவத்தை பற்றி அந்த வீடியோவில் பேசியுள்ளனர்.
அமெரிக்க ஆதரவு பெற்ற வளைகுடா நாடுகள்தான் தாக்குதலுக்கு காரணம் என அதிபர் ருஹானி தெரிவித்திருந்தார்.
ஆனால், இதனை மறுத்துள்ள அமெரிக்கா, எந்த தீவிரவாத தாக்குதல்களையும் அமெரிக்கா வன்மையாக கண்டிக்கும் என்று கூறியுள்ளது.
இந்நிலையில் ருஹானியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“ருஹானி இப்படி எங்களை குற்றஞ்சாட்ட முடியாது. அவர் முதலில் சென்று தன் கண்ணாடியை பார்க்க வேண்டும்” என சி என் என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தூதர் நிக்கி கூறினார்.
இந்த வாரம் நடைபெறவுள்ள ஐ.நா பொது கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பை, இரான் அதிபர் ருஹானி சந்திக்க உள்ளார்.
ஐ.நா கூட்டத்திற்கு செல்வதற்கு முன் பேசிய அதிபர் ருஹானி, இரான் இந்த குற்றத்தை பொறுத்துக் கொள்ளாது என்று கூறினார். இத்தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் யாரென்று நன்றாக தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இரான் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் பலி, 20 பேர் காயம்
- செளதி அரேபியா-அமெரிக்கா நட்பின் பின்னணியும், எதிர்காலமும்
அமெரிக்காவின் கைப்பாவையாக எந்த நாடு செயல்படுகிறது என்று குறிப்பிடாத அதிபர் ருஹானி, இரானின் எதிரியான சௌதி அரேபியா, ஐக்கிய அரபு மற்றும் பெஹ்ரைனை கூறுவதாகவே பலராலும் பார்க்கப்படுகிறது.
இரானில் அரபு சிறுபான்மையினருக்கிடையே பிரிவினைவாத செயல்பாடுகளுக்கு சௌதி ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே இரான் குற்றஞ்சாட்டியிருந்தது.
ஐக்கிய அரபு அமீகரமும், பெஹ்ரைனும், சௌதி அரேபியாவின் நெருங்கிய கூட்டாளிகள்.
அமெரிக்கா – இரான் உறவில் பதற்றம் ஏன்?
அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு தரப்புக்கும் இடையிலான உறவு பல தசாப்தங்களாக சிக்கலில் உள்ளது.
அணுஆயுத திட்டத்தை இரான் மேற்கொள்வதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால், இரான் அதனை மறுத்துள்ளது.
2015ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது, இரானும் அமெரிக்காவும் அணுஆயுத ஒப்பந்தம் ஒன்றை எட்டியது. இதில் சீனா, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன. அதில் விதிக்கப்பட்ட தடைகளில் நிவாரணம் பெறுவதற்காக, அணுஆயுத செயல்பாடுகளை குறைத்துக் கொள்வதாக இரான் ஒப்புக்கொண்டது.
எனினும், டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்பு இந்த உறவுகள் முறிந்து ஒப்பந்தம் கைவிடப்பட்டது. அப்போதிலிருந்து அமெரிக்கா, இரான் மீது விதிக்கப்பட்ட தடைகள் தொடர்ந்து வந்தன.-BBC_Tamil