இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வெகுஐன அமைப்புக்களின் ஒன்றிய ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன் காலை 9 மணிக்கு இப்போராட்டம் தொடங்கி தொடர்ந்து ஐந்து மணி வரை நடைபெறவுள்ளது.
இலங்கையின் அனுராதபுரம் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் வடக்கில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்றைய தினம் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை வெகுஐன அமைப்புக்களின் ஒன்றியத்தினர் தற்போது ஆரம்பித்துள்ளனர்.
- இலங்கை: போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் மருத்துவமனையில் அனுமதி
- இலங்கை: ஊடகவியலாளரைக் கடத்திய விவகாரம் – ராணுவ அதிகாரி கைது
இந்த அடையாள உண்ணாவிரதத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த பத்து நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்து ஒன்பது வருடம் ஆகிவிட்ட நிலையில் தொடர்ச்சியாக அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது 100 நாட்கள் வேலைத் திட்டத்தினூடாக அரசியல் கைதிகளின் விடயத்தை கையாள்வதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அவ்வாறு நூறு நாட்களை கடந்தும் அரசியல் கைதிகள் தொடர்பாக தீர்க்கமான இறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படாமலே போய்விட்டது. இத்தகைய சூழ்நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் தமது கோரிக்கையை முன்வைத்து கடந்த ஜந்து தடவை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது ஒவ்வொரு முறையும் தமிழ் அரசியல் தலைமையினால் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அவர்களது போராட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு முறை கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் வைத்து இரா.சம்மந்தன், தாம் கடவுளை போல ஜனாதிபதியை நம்புவதாகவும் அவர் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு பெற்றுத் தருவதாகவும் தெரிவித்து அப்போது போராட்டத்தை முடித்து வைத்திருந்தார்.
ஆனாலும் அதன் பின்னரும் இன்றுவரை அப்பிரச்சனை முடிந்தபாடில்லை. கடந்த காலங்களில் ஜே.வி.பி யினரின் கிளர்ச்சியாளர்களுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யபட்டிருந்தார்கள். எனவே தமிழ் அரசியல் கைதிகளையும் அது போன்று செய்ய வேண்டும் என்றனர். -BBC_Tamil