ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான யோசனை நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நீதியும் இதுவரை வழங்கப்படவில்லை என காணாமல் போனோர் சம்பந்தமான அமைப்பின் செயலாளர் லீலா தேவி ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதிக்கட்ட போரின் போது ஓமந்தை இராணுவ சோதனை சாவடியில் வைத்து கையளிக்கப்பட்ட எனது மூத்த மகன் காணாமல் போனார்.
இலங்கை ஜனாதிபதி விசேட அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி, படை உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவோ, அவர்களை விளக்கமறியலில் வைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார்.
11 மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு திருகோணமலையில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய படை அதிகாரி ரவிந்திர விஜேகுணரத்னவை கைதுசெய்ய வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையின் நீதித்துறை இலங்கை ஆட்சியாளர்களின் கைகளில் உள்ளது. இதனால், இலங்கையின் உள்நாட்டு நீதி கட்டமைப்பு எமக்கு தேவையில்லை. சர்வதேச நீதி கட்டமைப்பையே நாங்கள் கோருகிறோம்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு, இலங்கை இராணுவம் செய்த போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் தலையிட்டு சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கட்டமைப்பை ஏற்படுத்தி, குற்றம் செய்தவர்களுக்கு சர்வதேச சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்க வேண்டும் எனவும் லீலா தேவி ஆனந்தராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-athirvu.in