ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு தற்போது பொய்யாக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டை சர்வதேச அரங்கில் காட்டிக் கொடுத்துவிட்டார் என்ற பரப்புரை கடந்த மூன்றரை வருடங்களாக எதிரணியினரால் முன்வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஐ.நா. அரங்கில் அவர் ஆற்றிய உரையின் மூலம் அந்த விமர்சனங்களுக்கு முடிவு கட்டி, தான் தாய் நாட்டை நேசிக்கும் ஒருவர் என்பதை அவர் மீண்டும் நிரூபித்துவிட்டார் என்றார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் எட்டப்படவுள்ள நிலையில், நாட்டில் நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்க இலங்கை சுயாதீனமாக இயங்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் சர்வதேசத்தின் அழுத்தமோ அல்லது தலையீடோ இருக்கக்கூடாது எனும் செய்தியையும் மிக அழுத்தமாக கூறியிருந்தார்.
இதனூடாக அவர் சர்வதேசத்தை புறக்கணிப்பதாக அர்த்தமில்லை. மாறாக, தமக்கு உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அதனை சர்வதேசம் செய்தால் போதும் என்றே ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த நிலைப்பாடு ஸ்தீரமானதாகும். இதனை தற்போது சர்வதேசம் கூட ஏற்றுக்கொண்டுள்ளது.
மேலும், நல்லிணக்கம் என்பது வடக்குக்கு மட்டுமன்றி, தெற்கிற்கும் அவசியமாகும். ஏனெனில், தமிழீழ விடுதலைப் புலிகளினால் தெற்கிலுள்ளவர்களும் பாதிக்கப்பட்டார்கள். புலிகளால் இராணுவத்தினர் கொல்லப்பட்டமை, ஊனமாக்கப்பட்டமையை அவர்களும் மறந்திருக்க மாட்டார்கள். எனவே, இரண்டு தரப்பையும் இணைத்துக் கொண்டுதான் நாம் நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிக்க வேண்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.
-eelamnews.co.uk