தமிழ் பேசும் மக்கள் நம்பி ஏமாந்த கடைசிச் சிங்களத் தலைவராக மைத்திரிபாலவே இருப்பார் என்பதை வரலாறு சுட்டிக்காட்டும், இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங் கம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை தொடரில் அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதில் உள்ளதாவது, இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் தொடர்பாக மைத்திரி தனது உரையில் மூச்சுக் கூட விடவில்லை.
அவர் தனது உரையில் புத்த பகவானின் போதனை ஒன்றைச் சுட்டிக் காட்டி ஒருவரின் உடலில் ஒரு முள் பாய்ந்திருப்பின் அதனால் ஏற்படும் வேதனையைப் போலவே அந்த முள் பாய்ந்ததால் வேதனை ஏற்பட்டது என்ற சிந்தனையும் ஞாபகமும் கூட வேதனையையும் ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் மக்களின் பல்லாயிரக் கணக்கான உயிரிழப்புக்கள் அவய இழப்புக்கள், உறவுகளை இழந்தமை, சொத்துக்களை இழந்தமை பற்றி வேதனையடைந்தது மட்டுமல்லாமல், சிந்தனையும், ஞாபகமும் வேதனையடைந்து தரும் என எமது மக்களின் வேதனையை ஐக்கிய நாடுகள் சபையில் சுட்டிக் காட்டியமைக்கு தமிழ் மக்களின் சார்பில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
ஆனால் தமிழ் பேசும் மக்கள் நம்பி ஏமாந்த கடைசிச் சிங்களத் தலைவராக நீங்கள் மட்டுமே இருப்பீர்கள் என்பதை வரலாறு சுட்டிக் காட்டும் என நம்புகின்றேன்.
ஏனெனில் இலங்கையில் இனிமேல் போர் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். போருக்காக காரணியாக தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கான ஆணி வேர் எது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் தேசிய நல்லிணக்கம் ஏற்படாது என்பதை அரச தலைவர் தெரிந்துகொள்ள வேண்டும்.
பலஸ்தீன மக்களின் பிரச்சினை பற்றிக் குறிப்பிட்டு அந்த மக்களுக்கு இலங்கையில் ஆதரவு என்றும் உள்ளது போல் தொடரும் எனவும் தெரிவித்திருந்தார். பலஸ்தீன மக்களின் பிரச்சினையைப் போலவே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளும் உள்ளதை ஏன் மறந்து போகிறார் எனத் தெரியவில்லை.
வௌிநாட்டுத் தலையீடு தேவையில்லை. எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்வோம் என்று அரச தலைர் கூறியிருக்கின்றார். இந்த உரை நியூயோர் நகரில் இருந்து இலங்கை சிங்கள மக்களுக்கான, சிங்கள வாக்களர்களுக்கான உரையாகவே பார்க்கப்பட முடியும்.
அப்படியென்றால் தமிழ்த் தேசிய இனம் தனது தலைவிதியைத் தாமே தீர்மானிக்க இடம்கொடுக்க அரச தலைவர் தயாரா?. எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவை நாம் கோருவது தவறல்ல என்பது அரச தலைவர் உரை மூலம் நாம் உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாத கூட்டத் தொடரில் ஐக்கிய நாடகள் மனித உரிமைப் பேரவையில் போர்க் குற்றங்களுக்காகவும், ஏனைய குற்றங்களுக்குமான விசாரணையை இலங்கை அரசே வௌிநாட்டு நீதிபதி (பொதுநலவாய நாடுகளின் நீதிகள் உட்பட) வழக்குத் தொடுநர்கள், விசாணையாளர்கள், வழக்கறிஞர்கள் அடங்கிய விசாரணையை நடத்துவதற்கு 30/1 தீர்மானம் மூலம் ஏற்றுக் கொண்டிருந்தது.
பின்னர் அவற்றைச் செயற்படுத்தமாட்டோம் என அரச தலைவர், தலைமை அமைச்சர், மூத்த அமைச்சர்கள் பகிரங்கமாக இலங்கைக்கு தெரிவித்திருக்கிறார்கள். அரசதலைவருக்கு துணிச்சல் இருந்திருந்தால் முதுகெலும்பு இருந்திருந்தால் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றியபோது போர்க்குற்றங்களை நாங்கள் விசாரிக்கமாட்டோம் என்று கூறியிருக்க வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், இனப் படுகொலைகள், விசாரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தமது வேண்டுகோளை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஊடாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு அனுப்பிவைத்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லது பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்துக்கு (ict) பாரப்படுத்தபட வேண்டும் எனக் கோரப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் சார்பில் எமது நிலைப்பாடாகும்.
இலங்கைக்குள் அரசியல் தீர்வு கிடைக்காது என்பதை சொல்லாமல் அரச தலைவர் சொல்லியுள்ளார். அதனால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகைளை நிறைவேற்றுவதற்காக வடக்கு கிழக்குப் பிராந்தியத்தில்பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை தமது மேற்பார்வையில் நடத்த வேண்டும் எனக் கோருகின்றோம். இந்த நிலைப்பாட்டின் நியாயத் தன்மையை பன்னாடுகள் புரிந்து கொள்ளும் என நம்புகிறோம். – என்றுள்ளது.
-http://eelamnews.co.uk