இறுதி யுத்தத்தை வழிநடத்தியது நானே! நியூயோர்க்கில் மைத்திரி!

போரின் இறுதி இரண்டு வாரங்களில், விடுதலைப் புலிகள் கொழும்பில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததால், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சரத் பொன்சேகா போன்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர் என்று போட்டுடைத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று நியூயோர்க்கில், சிறிலங்கா சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.

‘போரின் இறுதி இரண்டு வாரங்களில், சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானத்தைப் பயன்படுத்தி கொழும்பு நகரில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

அதனால் தான், போர்க்காலத்தில் உயர்மட்டத் தலைவர்களாக இருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போன்றவர்கள் போரின் இறுதி இரண்டு வாரங்களிலும் நாட்டில் இருக்கவில்லை.

அவர்கள் நாடு திரும்பும் வரை, பதில் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு என்னிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த- இறுதிக் கட்டத்தில் இவர்கள் எல்லோரும் ஏன் நாட்டை விட்டு வெளியேறினர் என்பது எவருக்கும் தெரியாது. ஆனால் எனக்குத் தெரியும்.

எனவே, போரின் இறுதி இரண்டு வாரங்களில் என்ன நடந்தது என்பது ஏனையவர்களை விட எனக்குத் தெரியும்.

நான் தலைமை தாங்கிய சிறிலங்காவின் ஆயுதப்படைகள், போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்களைச் செய்யவில்லை. ஆனால் கடுமையாகப் போரிட்டன.

எனவே, சிறிலங்கா அதிபர் என்ற வகையில், போர்வீரர்களை, அவர்களுக்கு எதிரான மோசமான குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாக்க, எல்லாவற்றையும் செய்வேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-http://eelamnews.co.uk

TAGS: