புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்ற போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கான சரியான அரசியல் தலைமைத்துவத்தை கொடுத்து நகர்த்தாமல் இருப்பதே இழுத்தடிப்பிற்கு காரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பொறுப்புக்கூறல் விடயத்திலும் இதே இழுத்தடிப்புக் காணப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73வது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) ஆற்றிய உரை தொடர்பாக, நேற்று (வியாழக்கிழமை) கருத்துத் தெரிவிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் மற்றும் 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 34/1 என்ற தீர்மானம் இரண்டிற்கும் இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது. அவற்றிலே, குற்றங்கள் தொடர்பாக சர்வதேச தலையீட்டுடன் நீதி விசாரணை இடம்பெறும் என்பதை இலங்கை ஏற்றுக் கொண்டது.
எனினும், சர்வதேச தலையீடு வேண்டாம் என்றும் உள்நாட்டிலேயே பிரச்சினையை தீர்த்துக்கொள்கின்றோம் என்றும் கூறியிருப்பதன் மூலம் இலங்கைக்கு மட்டுமன்றி, சர்வதேசத்திற்கு எழுத்துமூலமாக இரண்டு தடவைகள் வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி மீறியுள்ளார். ஆகவு, ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.
-4tamilmedia.com