இந்தோனீசியா: நிலநடுக்கம், சுனாமிக்கு 800க்கும் மேற்பட்டோர் பலி

இந்தோனீசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் குறைந்தது 832 பேர் பலியாகினர் என அந்நாட்டின் தேசிய பேரிடர் முகமை தெரிவித்துள்ளது.

முதலில் நினைத்தததைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதி பெரியதாக உள்ளது என அம்முகமை தெரிவித்துள்ளது.

வெள்ளியன்று 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர் என முகமையின் செய்தி தொடர்பாளர் சுட்டோபோ பூர்வோ நுக்ரோஹோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த நிலநடுக்கம் 6 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகளை உருவாக்கியது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தோனீசியாவின் பாலு நகரில் இடிபாடுகளுக்கு மத்தியில் வெறும் கைகளால் சிக்கியவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர்.

டாங்காலா என்னும் நகரில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெளிவான தகவல்கள் இல்லை எனவே அந்நகரின் சேதங்கள் குறித்து அதிக கவலைகள் உள்ளன என அவர் தெரிவித்தார்.

இந்தோனீஷியா

சாலைகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், பாலங்கள் இடிந்துவிட்டமையாலும் தேடுதல் பணிகளில் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 1.6மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

“இது ஒரு பேரழிவு ஆனால் இது மேலும் மோசமானதாகவும் இருக்கலாம்” என செஞ்சிலுவை சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டோங்கலா தீவில் வெள்ளியன்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்பு சிறு சிறு அதிர்வுகளும் ஏற்பட்டு வருகின்றன.

பாலு தீவின் தற்போதைய நிலை என்ன?

பாலு நகரில் ரோ ரோ என்ற விடுதி ஒன்றில் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியிருந்த 24 பேரை மீட்புப் பணியாளர்கள் வெறும் கைகளை கொண்டு மீட்டுள்ளனர்.

உதவிகள் கோரி மக்கள் கதறும் குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே உள்ளது ஆனால் மீட்புப் பணியில் ஈடுபடுத்த பெரிய இயந்திரங்கள் ஏதும் இல்லை என அந்த விடுதியின் உரிமையாளர் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்தார்.

335,000 மக்கள் தொகை கொண்ட அந்நகரில் இன்னும் பலரை காணவில்லை, மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் சாலைகளில் பலியானவர்களின் உடல்கள் கிடக்கின்றன மேலும் மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதால் காயமடைந்தவர்களுக்கு தற்காலிக கூடாரங்களில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இத்தனை பலிகள் ஏன்?

இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் மாலை 6.03க்கு 7.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின் சுனாமியும் ஏற்பட்டது என அமெரிக்க கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலு தீவில் திருவிழா ஒன்றுக்கு தயார் செய்து கொண்டிருந்த மக்கள் 3 மீட்டர் உயரத்துக்கு வந்த அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இந்தோனீஷியா

மக்கள் பயத்தில் அங்கும் இங்குமாக ஓடுவதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.

உயிர்பிழைத்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்தோனீஷியா

“நிலநடுக்கம் ஏற்பட்ட போது நாங்கள் அனைவரும் பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தோம் இங்குள்ள மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. உணவு, குடிநீர் மற்றும் சுத்தமான நீர் தேவைப்படுகிறது; அடுத்த வேளை சாப்பிடுவதற்கும் எங்களுக்கு உணவில்லை” என நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 39 வயது அன்சர் பாச்மிட் தெரிவித்தார்.

“எங்களை பாதுகாத்துக் கொள்ள எங்களுக்கு போதிய நேரம் இல்லை நான் சுவர்களின் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டேன்..எனது மனைவியும், குழந்தையும் உதவிக்கேட்டு அழுது கொண்டிருந்தனர் அவர்களுக்கு என்வாயிற்று என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.” என நிலநடுக்கத்தில் சிக்கிய நபர் ஒருவர் செய்தி முகமை ஒன்றிடம் தெரிவித்துள்ளார். -BBC_Tamil