விடுதலைப் புலிகளின் காலத்தில் புனித பிரதேசமாக இருந்த யாழ் வடமராட்சிப் பிரதேசம்!

யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசம் விடுதலைப் புலிகளின் காலத்தில் புனிதமாக இருந்ததாக யாழ் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இன்று வடமராட்சி கிழக்குப் பகுதியே போதைப் பொருட்கள் தரையிறக்கப்படும் முக்கிய தளமாக இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று மாலை வவுனியாவில் இடம்பெற்ற தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஊடக சந்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தின் வடமராட்சி கிழக்குப் பகுதியில் தான் சட்டவிரோத மீன்பிடித் தொழில் காணப்படுகின்றது. சுருக்கு வலைகள் பயன்படுத்தப்படுவதுடன், அட்டை பிடிக்கும் நடவடிக்கையும் இடம்பெறுகிறது. மக்கள் இது தொடர்பில் போராடி தற்போது, பிரதேச செயலாளர் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வடமாகாணத்தில் வடமராட்சி கிழக்கு பகுதியே போதைவஸ்து களமாக இருக்கிறது. வடமராட்சி கிழக்கு பகுதியில் போதைவஸ்து இறக்கப்பட்டு அவை தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. முன்னர் மன்னார் பகுதியில் இருந்து போதைவஸ்து கடத்தப்பட்டது. தற்போது அது சுழன்று வடமராட்சி கிழக்கு பகுதிக்கு வந்துள்ளது. இதை அரசாங்கம் தடை செய்யாமல் இருப்பது எங்களுக்கு சந்தேகமான பார்வையை உருவாக்கிறது.

இலங்கையில் சட்டத்தின் படி போதைவஸ்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதை அவர்கள் கட்டுப்படுத்தாமல் இருக்கிறார்கள். இதை சரியான முறையில் கட்டுப்படுத்தி போதைவஸ்து இறங்காமல் தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாக இருக்கிறது. ஆனால் போதைவஸ்து வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

அண்மையில் கூட கடலில் போதைப்பொருள் பிடிபட்டதாக சொல்கிறார்கள். அதற்கு என்ன நடந்தது என்று தெரியாது. அதனுடன் தொடர்புடையவர்கள் வெளியில் வந்து நிற்கிறார்கள். வடமராட்சி கிழக்கு பகுதியில் போதை வஸ்தை இறக்காமல் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகம் சீர்கெட்டு செல்கிறது. சிறுவர்கள் கூட கஞ்சாவுடன் திரிகிறார்கள். விடுதலைப் புலிகள் காலத்தில் வடமராட்சி பிரதேசம் ஒரு புனிதபிரதேசமாக இருந்தது. ஆனால் இன்று இவ்வாறு இருப்பதைப் பார்க்கும் போது அரசாங்கம் ஊக்கிவிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

அரசாங்கத்திற்குள் அதிகாரத்தில் உள்ள ஒருவர் கூட வடமராட்சி கிழக்கில் இருக்கிறார். ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்று வடமராட்சி கிழக்கு சட்டவிரோத மீன்படி மற்றும் போதைப் பொருள் என்பவற்றால் அழிவடைகிறது. இது தொடர்பில் நாம் பல தடவை சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு தெரிவித்துள்ளோம். அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்றார் அவர்.

-athirvu.in

TAGS: