உலகத் தமிழ் இனத்தின் இதயத்தால் என்றும் பூஜிக்கப்படும் உயர்ந்த நாமம், ‘முள்ளிவாய்க்கால்’ ஆகும். இந்தப் பூமிப்பந்தில், தமிழ் இனத்தின் இறுதி மூச்சு உள்ள வரை, இப்பெயர் பெரும் வீச்சுடன் என்றும் உயிர் வாழும்.
தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான, ஆயுதப் போராட்டம், அமைதி கொண்ட புனித பூமி முள்ளிவாய்க்கால். அவ்வாறாக, என்றுமே விலத்தி வைக்க முடியாத, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை, மனதில் இருத்தி, நினைவு கொள்ளல் நியாயமானது, நீதியானது, நிராகரிக்க முடியாதது.
இவ்வாறாக, இவ்வருட நினைவேந்தலை (மே 18) தனியார் வங்கி ஒன்றின் கிளிநொச்சிக் கிளையில் நடத்தியமை, விவகாரத்தை ஏற்படுத்தி இருந்தது. அதன் நீட்சியாக, அக்கிளையின் உதவி முகாமையாளரும் பணியாளரும், தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
“இறுதி யுத்தத்தில், உயிர்களை அர்ப்பணித்த உறவினர்களை நினைவு கூருவது, அவர்களது உரிமை” என, உதவி முகாமையாளர் தலைமையக உயர் அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்; வாதிட்டார். “இல்லை, இல்லை, இது கொல்லப்பட்ட புலிகளை நினைவு கூர்ந்து, வங்கியில் சுடர் ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடு, தேசத்துக்கு விரோதமானது” எனக் கொழும்பிலுள்ள தலைமையகம் வாதம் செய்தது.
இவ்விவகாரம், தமிழ் மக்களிடையே எதிர்ப்பு உணர்வுகளை, பரந்தளவில் தோற்றுவித்திருந்தது. பலர், சமூக வலைத்தளங்களில், தங்களது மனக்குமுறல்களை அள்ளிக் கொட்டினர். கொழும்பிலுள்ள தலைமையகத்துடனும் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு, தங்களது நியாயமான உரிமைகளை எடுத்துரைத்திருந்தனர். சிலர், வங்கியால் வழங்கப்பட்ட அன்பளிப்புப் பொருட்களைக் கூட, மீள ஒப்படைத்தனர். மேலும் பலர், அவ்வங்கியில் உள்ள தங்களது கணக்குகளை, உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
சரி, தமிழரின் உணர்வுகளை உணரத் தவறியதால், குறித்த தனியார் வங்கியில் பேணப்பட்ட தமது கணக்குகளை, முடிவுக்கு கொண்டு வந்திருந்தார்கள். இதேவேளை, பிறிதொரு தனியார் வங்கியில், கணக்கை ஆரம்பித்திருந்தார்கள். இரண்டுமே, தமிழ் மக்களின் உணர்வுகள் மீதும், நலன் மற்றும் உரிமைகள் மீது, அக்கறை கொண்டவைதானா என்பது கேள்விக்குரிய விடயம்.
வடக்கு, கிழக்கில் கிளை பரப்பியுள்ள அனைத்துத் தனியார் வங்கிகளின் சிந்தனைப் போக்கு, தமிழர் நலன்கள், உணர்வுகள், உரிமைகள் சார்பானவை இல்லை. சரி, அப்படித்தான் தமிழர் உணர்வு, நலன் உணர்ந்தவை என்றால், அடுத்துவரும் ஆண்டு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, வடக்கு, கிழக்கிலுள்ள வங்கிகள் நினைவு கூருமா? அல்லது, நடப்பு ஆண்டு நினைவு கூர்ந்தார்களா? இரண்டுக்குமே ‘இல்லை’ என்பதே, ஒற்றை விடை ஆகும்.
“பணியாளர்களை இடை நிறுத்திய குறித்த தனியார் வங்கியை, வடக்கு, கிழக்கில் தடை செய்க”, என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், நாடாளுமன்றில் கேட்டுக் கொண்டார். ஆனால், இது நடைமுறைக்கு முற்றிலும் சாத்தியமானது அல்ல.
தமிழ் மக்களிடமிருந்து, நிதியை எதிர்பார்க்கின்றவர்கள், தமிழ் மக்களுடன் நிழல் போல, கூடவே பயணிக்கும் அவர்களது உள்ளத்து உணர்வுகளை, கடைக்கண்ணால்க்கூடப் பார்க்கத் தவறி விட்டார்கள். தமிழ் மக்களின் பணத்தில் நோக்கம் செலுத்துபவர்கள், அவர்களது மனத்தை அளக்கத் தவறி விட்டார்கள்.
இவை, தமிழ் மக்கள், தங்களது நிதி மேலாண்மை, நிதி முகாமைத்துவம் பற்றிச் சிந்திக்கத் தூண்டி உள்ளன. தமது நிதி சார்ந்த விடயங்களைக் கையாள, தமக்கான தனித்துவமான வங்கி வேண்டும் என சிந்திக்கத் தலைப்பட்டுள்ளனர்.
வாடிக்கையாளரிடமிருந்து வைப்புகளை ஏற்றல், அவ்வைப்புகளைப் பிறிதொரு வாடிக்கையாளருக்குக் கடனாக வழங்கல், அதனூடாக வட்டி எனும் பெயரில் பணம் ஈட்டல். இதுவே வங்கிச் சேவையின் அடிப்படை ஆகும்.
எமது நிதியீட்டங்கள் எங்களுக்குள் வலம் வரவும், எங்களுக்குள் பகிரப்படவும் வேண்டும். எமது உழைப்பு எமக்குப் பயன் பட வேண்டும். இனப்பிரச்சினையின் நான்கு தூண்களான நிலம், மொழி, பண்பாடு என்பதில் நான்காவதாகப் பொருளாதாரம் உள்ளது.
ஆகவே, நாம், நம் ஊரில் அக்காலத்தில் பெரும் நிதி வளத்துடனும் மனித வளத்துடனும் இயங்கி, இன்று நலிவடைந்து இருக்கின்ற கூட்டுறவுக் கிராமிய வங்கிகளை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றால் என்ன?
கூட்டுறவு என்ற வார்த்தை உயர்வானது. புனிதமான, வலுவான, இறுக்கமான உறவு கொண்டது. தனி நபர்கள் ஒன்றுபட்டுக் கூடி உழைத்தல் எனப் பொருள் கொள்ளப்படும்.
பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் ஓர் அங்கமாகவே, கிராமிய வங்கிகள் செயற்பட்டு வருகின்றன. ஆரம்ப காலங்களில் விவசாயக் கடன், நகை அடகு பிடித்தல் போன்ற சேவைகளை ஆற்றி வந்திருந்தது.
தற்போது அங்கத்தவர்களிடமிருந்து வைப்புகளை ஏற்றல், சிறுவர் சேமம், நிலையான வைப்பு, காசோலைகளை ஏற்றல், மின்கட்டன அறவீடு, ஓய்வூதியம் வழங்கல், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கல், விவசாயிகளின் கமத்தொழில் ஓய்வூதியப் பணத்தை ஏற்று, உரிய காப்புறுதிச் சபைகளுக்கு அனுப்புதல், அரச ஊழியர்களுக்கான கடன் வழங்கல், பணியாளருக்கான கடன் வழங்கல், நிலையான வைப்புகளுக்கு எதிராகக் கடன் வழங்கல் போன்ற சேவைகளை ஆற்றி வருகின்றது.
கிராமிய வங்கிகளில், நடைமுறைக் கணக்குகளைப் பேணக் கூடிய ஏற்பாடுகள் இல்லை. வர்த்தக வணிக நடவடிக்கைகளுக்கு, காசோலை மூலமான கொடுக்கல் வாங்கல்களை செய்யக் கூடிய வகையில் நடைமுறைக் கணக்குகள் அவசியம் தேவை.
மேலும், பணத்தை வைப்பில் இடவும் மீளப்பெறவும் தன்னியக்க இயந்திர சேவைகள் இல்லை. ஆகவே, 24 மணி நேரமும் பணத்தை அனுப்பக் கூடிய, மீளப் பெறக் கூடிய வசதிகள் இல்லை. வேலை நாட்களில், வரிசையில் காத்து நின்று, இச்சேவைகளைப் பெற வேண்டிய சூழ்நிலை உண்டு.
பாரிய தொகைகளைக் கடனாகப் பெறக் கூடிய, வலுவான நிதி ஏற்பாடுகள் இல்லை. இதைவிடச் சில கிராமிய வங்கிகள், நிதி மோசடிச் சிக்கலில் சிக்கி உள்ளன. இவை போன்ற பல வசதியீனங்கள், கிராமிய வங்கிகளில் காணப்படுகின்றன.
“கூட்டுறவுத் துறைக்குள் அரசியல் நுழைந்தமையும் கூட்டுறவுத்துறை வீழ்ச்சி அடைந்தமைக்கான பிரதான காரணமாகும்” என, பண்டத்தரிப்பு பரிஸ் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில், அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலங்களில், நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்ற பலர், அதை மீளச் செலுத்த முடியாது, தம் வாழ்வைத் தாமாகவே நிர்மூலமாக்கிய சம்பவங்கள் நடந்தேறி உள்ளன; இன்னும் நிகழ்ந்து வருகின்றன.
இதைத் தவிர்க்கும் பொருட்டு, கூட்டுறவு அரவணைப்புக் கடன் திட்டத்தின் கீழ், குறைந்த வட்டியிலான கடன் வழங்கும் நடவடிக்கைகள் கிராமிய வங்கிகள் ஊடாக ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.
அதற்கு, கூட்டுறவுச் சங்கத்தில், ஓர் உறுப்பினராக இணையுமாறு, வடக்கு மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ். மாவட்டத்தில், 23 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் கீழ் இயங்கும் 32 கிராமிய வங்கிகள் ஊடாக, உடனடியாக இந்தக் கடன் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் இச்செயற்பாடுகள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன.
இதன் ஊடாகக் கூட்டுறவு, மக்களிடம் மீண்டும் வலுப்பெற வேண்டும். கூட்டுறவின் அடிப்படைப் பண்புகளான சுயஉதவி, பரஸ்பரஉதவி, சிக்கனம் என்பன, போரால் சிதைந்த உள்ளங்களைப் பக்குவப்படுத்த வேண்டும். இதனூடாக, வீழ்ந்து கிடக்கும் கிராமிய வங்கிகள்,, நிமிர்ந்த நடைபயில வேண்டும்.
கிழக்கு மாகாணத்திலும் கூட்டுறவுச் சங்கங்கள், கிராமிய வங்கிகள் வலுப்படுத்தப்பட வேண்டும். ‘எம் கையே, எமக்கு உதவி’ என்பது போல, கூட்டுறவின் எழுச்சியும் எம்கைகளில் மட்டுமே தங்கி உள்ளது.
ஆனாலும், பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் நமக்கான, நமது வங்கி என்ற உணர்வுடன், விருப்புடன் உழைக்க (இஸ்டப்பட்டு கஸ்ரப்பட) நாம் தயாராக வேண்டும்.
எங்கள் ஊரிலுள்ள, எமது கிராமிய வங்கிகளை, அனைத்து வசதிகளையும் தன்னகத்தே கொண்ட, வளமான வங்கிகளாக, எம்மை என்றும் அன்போடு அரவணைக்கும் வங்கிகளாக உயர்த்த வேண்டும் என, நாம் அனைவரும் ஒருங்கே கை கோ(சே)ர்க்க வேண்டும்.
அழகான, தமிழ் மொழியில் பல்வேறு நாமங்களிலும் தேட்டக் (சேமிப்பு) கணக்குகள், முதலீட்டுத் திட்டங்கள், கடன் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதனூடாக, எங்கும் எதிலும் எமது, தமிழ் மொழியும் உயிர்ப்புடனும் துடிப்புடனும் வாழ வேண்டும்.
தற்போது உள்ள குறைபாடுகளைக் கூட, எதிர்காலத்தில் வெற்றி கொள்ளலாம் என்ற நம்பிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், பல தெய்வங்களில் நம்பிக்கை வைத்து, தெய்வம் வழி வகுக்கும் என வழிபட்டாலும், நம்மில் நம்பிக்கை வைத்தால் மட்டுமே, வாழ்வில் உயரலாம்; சிகரங்களைத் தொடலாம்.
மலை, தானே உயரத்தில் இருப்பவன் என, கீழே இருக்கும் அலையை மதிப்பது இல்லையாம். கடின உழைப்பு இல்லாது, காலப்போக்கில் மலை, மெல்ல மெல்ல உடைந்து, சிதைந்து விட்டதாம். அலை தொடர்ந்தும் விடாமுயற்சியுடன் உழைத்துக் கொண்டே இருக்குதாம். நாமும் அலை போல, ஓயாது பயணிப்போம்; இலக்குகளை அடைவோம்.
-tamilmirror.lk