விடுதலைப் புலிகளைப் போன்று ஒரு அமைப்பு வடக்கில் எழுச்சி பெறுவதற்கு 100 ஆண்டுகளில் வாய்ப்பே இல்லை என்று சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று சட்டம், ஒழுங்கு அமைச்சில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் வடக்கில் செயற்படும் ஆவா குழு தொடர்பாக, மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ரொசான் பெர்னான்டோ விளக்கமளித்தார்.
‘ஆவா குழுவினால் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில், நான்கு காவல்துறை பிரிவுகளில் மாத்திரம் அது செயற்படுகிறது. இணுவில், கோப்பாய் பகுதிகளிலேயே அதிக சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
ஆவா குழுவினரின் வாள்வெட்டுகளால் சிறியளவிலான காயங்களே பெரும்பாலும் ஏற்பட்டுள்ளன.
வெளிநாட்டுக்குச் சென்ற தமது சகோதரர்கள் அனுப்பும் பணத்தைக் கொண்டு, தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்கள் சிலரே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர். சிலர், மாலை வேளைகளில் மது அருந்தி விட்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
உள் மோதல்களை அடுத்து பலரும் வெளியேறுவதால், ஆவா குழு படிப்படியாக சிதைந்து வருகிறது.” என்றும் அவர் கூறியுள்ளார்.
-puthinappalakai.net