டிசெம்பர் 31இற்கு முன் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை, எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் நாளுக்கு முன்னர் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கான அதிபர் செயலணியின் மூன்றாவது கூட்டம் நேற்று முன்தினம், சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது, காணிகள் விடுவிப்பில் காணப்படும் இழுபறி, மகாவலி எல் வலய அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில், முல்லைத்தீவு,வவுனியா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை டிசெம்பர் 31ஆம் நாளுக்கு முன்னர், உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டார்.

இது தொடர்பான திட்டத்தை காலவரம்புடன் செயற்படுத்துமாறும், இதன் முன்னேற்றங்கள் தொடர்பாக, அடுத்தமாதம் நடக்கும் செயலணிக் கூட்டத்தில் தெரியப்படுத்துமாறும் சிறிலங்கா அதிபர் பணித்துள்ளார்.

அதேவேளை, வடக்கில் மகாவலி எல் வலயத் திட்டத்தை செயற்படுத்துவதை நிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: