உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேருமானால் அது வடகிழக்கில் பெரும் யுத்தமாக வெடிக்குமென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடாத்தப்பட்ட இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் அரியநேத்திரன் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
“2009ஆம் ஆண்டு போர் நிறைவுபெற்றப் பின்னரும் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. ஒரு சிலஅரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட போதிலும் அனுராதபுரம் உட்பட பல சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் பல தடவைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதர் உட்ப டநல்லாட்சி அரசாங்கத்திடம் கோரிக்கைகள் விடுத்தபோதிலும் தொடர்ச்சியாக இவர்களின் விடுதலை இழுத்தடிக்கப்பட்டே வருகின்றது.
தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
ஜனாதிபதிக்கு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான அதிகாரம் இருக்கின்றது. ஆனால் அவர் மௌனம் சாதித்து வருகின்றார்.
அண்மையில் நடைபெற்ற வட,கிழக்கு அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டத்தில் வட,கிழக்கிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கடுமையான கருத்துகளை முன்வைத்துள்ள போதிலும் ஜனாதிபதி அரசியல் கைதிகள் விடயத்தில் நலுவல்போக்கினையே கடைப்பிடிக்கும் நிலையினை காணமுடிகின்றது.
ஆகையால் ஜனாதிபதி அரசியல் கைதிகள் விடயத்தில் முழுப்பொறுப்பையும் ஏற்று, அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலைசெய்ய வேண்டும்.
சிலவேளை அவ்வாறு விடுதலை செய்யாவிட்டு, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் யாருக்காவது உயிர் ஆபத்துகள் ஏற்படுமானால் வடகிழக்கிலே அது பாரிய யுத்தமாக வெடிக்கும். அதில் மாற்றுகருத்து இல்லை.
இதனால் ஜனாதிபதி இவைகளை கருத்திற்கொண்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும்” என அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
-eelamnews.co.uk