யாழில் இயங்கும் ஆவா குழு இளைஞர்களால் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ வாள்வெட்டு கலாசரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்வங்கள் மற்றும் வேறு வன்முறைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்புக்கள் அனைத்தும் வெறும் வாய்வார்த்தைகளே என மக்கள் நினைக்கும் வகையில் வாள்வெட்டுக் கும்பல்கள் யாழ்ப்பாண நகர் உள்ளிட்ட பகுதியில் சுதந்திரமாக வாள்களுடன் நடமாடுகின்றன.

அத்துடன், கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹஏஸ் வான், முச்சக்கர வண்டி என்பவற்றை அடித்துச் சேதப்படுத்தியதுடன் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தித் தப்பிச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் கொக்குவில் ஆத்திசூடி வீதியில் நேற்றுச் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நகர் ஓட்டுமடம் பகுதியில் உள்ள ஒழுங்கைகள் மற்றும் கொக்குவில் பகுதியில் வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த 6 பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை நடமாடியுள்ளனர்.

முகத்தை துணியால் மூடிக் கட்டியவாறு நடமாடிய இந்தக் கும்பல் யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றை அடித்துச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றது.

அத்துடன், கொக்குவில் ஆத்திசூடி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அங்கு வீட்டு யன்னல் கண்ணாடிகள், ஹஏஸ் வான் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றை அடித்துச் சேதப்படுத்தி தப்பித்தது என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

“ஆவா குழு என்பது நினைப்பதைப் போன்று பெரியதொரு குழு அல்ல. சிறுசிறு குற்றச்செயல்களில் ஈடுபடும் இந்தக் குழுவால் வட மாகாணத்தின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

கொழும்பிலுள்ள பொதுநிர்வாக மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார முன்னிலையில் அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.

“வடக்கு மாகாணத்திலுள்ள 53 பொலிஸ் பிரிவுகளில் யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய நான்கு பொலிஸ் பிரிவுகளில் மாத்திரமே இந்த ஆவா குழுவினரின் குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன.

ஆவா குழு உறுப்பினர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துகின்ற போதும், சிலர் பிணையைப் பெற்று வெளியேறுகின்றனர். இவ்வாறு வெளியேறுபவர்கள் தொடர்ந்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் .

யாழ். மாவட்டத்தில் இணுவில் மற்றும் கொக்குவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே ஆவாக்குழுவில் அதிகம் இருக்கின்றனர்.

தமிழகத்தின் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் இவ்வாறு குழுக்களை அமைத்து செயற்படுகின்றனர். இவர்களின் உறவினர்கள் பலர் வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் பணத்தில் இளைஞர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

போர் முடிவடைந்த பின்னர் காணப்படும் வேலைவாய்ப்பு பிரச்சினை உள்ளிட்டவையும் இந்த நிலமைக்குக் காரணமாகும்.

பொலிஸாரின் நடவடிக்கைகளால் ஆவா குழுவின் செயற்பாடுகள் குறைந்து செல்வதை தடுக்கும் நோக்கில் அவர்கள் வீடுகளின் மீது தாக்குதல்களை நடத்தி பயத்தை உருவாக்கி வருகின்றனர்” என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் நகர் மற்றும் கொக்குவிலில் பகுதிகளில் வாள்வெட்டுக் கும்பல்களில் அட்டூழியங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இதேவேளை, ஆவா குழுவை அடக்க இராணுவத்தின் உதவி தேவையில்லை என்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், வன்முறைக் கும்பல்களின் அடாவடி தொடர்வதை வேறு கோணத்திலும் பார்க்கவேண்டும் என்று நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

-athirvu.in

TAGS: