ஐக்கியத் தீர்வா அல்லது தனிநாடா? – வடக்கு – கிழக்கில் கருத்துக்கணிப்பு வேண்டும்! ஐக்கிய சோசலிசக் கட்சி

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வா அல்லது தனிநாடா வேண்டும்? என்பது குறித்து வடக்கு, கிழக்கில் வாழும் மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி தென்னிலங்கையிலுள்ள இடதுசாரி கட்சியொன்று தீர்மானம் நிறைவேற்றவுள்ளது.

சிரேஷ்ட இடதுசாரி தலைவர்களில் ஒருவரான சிறிதுங்க ஜயசூரிய தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் 13,14 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போதே மேற்படி யோசனை முன்மொழியப்பட்டு அது தீர்மானமாக நிறைவேற்றப்படவுள்ளது.

தமிழர்களுக்கான அரசில் தீர்வுத்திட்டம் குறித்தும், கட்சியின் மாநாடு சம்பந்தமாகவும் கொழும்பிலுள்ள ‘காலைக்கதிர்’ செய்தியாளருக்கு வழங்கிய குறுகிய செவ்வியிலேயே சிறிதுங்க ஜயசூரியவால் மேற்படி தகவல்கள் வெளியிடப்பட்டன.

“சுயாட்சி கோரி அறவழியில் போராடிய தமிழ் மக்களின் கோரிக்கைகள் முதலாலித்துவ அரசுகளால் நிராகரிக்கப்பட்டதையடுத்தே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி மறவழியில் போராடத்துவங்கினர்.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதையடுத்து அப்போராட்டத்தை ஜனநாயக வழியில் அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்தது. எனினும், இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உரிய வகையில் செயற்படவில்லை. அவர்களிடம் உறுதியான கொள்கை இருக்கவில்லை.

மத்திய அரசுகள் மீது வைத்த நம்பிக்கைக்கு பதிலாக, வீதியில் இறங்கி தொடர் போராட்டங்களை நடத்தியிருந்தால்கூட அனைத்துலக சமூகம் களமிறங்கியிருக்கக்கூடும். நல்லாட்சி எனக் கூறப்படும் அரசு பின்னால் கூட்டமைப்பு சென்றது. அதை தருமாறும், இதை வழங்குமாறும் கேட்டது. இறுதியில் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.

அடுத்த மாதம் ஆரம்பமானதும் வரவு – செலவுத்திட்டம் குறித்தும், ஆட்சிக்கவிழ்ப்பு குறித்துமே பேசப்படும். முஸ்லிம் கட்சிகள் மஹிந்த பக்கம் தாவக்கூடும். அவ்வாறானதொரு சூழ்நிலையில் புதிய அரசியலமைப்பு பற்றியோ அல்லது தீர்வுத்திட்டம் சம்பந்தமாகவே பேசுவதற்கு இடமேயில்லை. அத்துடன், கட்சி தாவல்களால் கூட்டமைப்பின் பேரம் பேசும் சக்தியும் குறைவடையும்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசுகளாலும் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமல்போனது. தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம் என்பதை எமது கட்சியே அன்றுமுதல் இன்றுவரை வலியுறுத்தி வருகின்றது.

பிரிந்து செல்வதா அல்லது கூட்டாக இருப்பதா என்பது குறித்து ஸ்கொட்லாந்து மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதுதான் உயரிய ஜனநாயம். அந்தப் பாணியில் வடக்கு, கிழக்கு மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்படவேண்டும். இதை வலியுறுத்தி எமது கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது” – என்றார்.

-http://eelamnews.co.uk

TAGS: